வடகாடு பகுதியில் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வரும் விவசாயிகள்


வடகாடு பகுதியில் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வரும் விவசாயிகள்
x
தினத்தந்தி 25 Dec 2020 6:10 AM IST (Updated: 25 Dec 2020 6:10 AM IST)
t-max-icont-min-icon

வடகாடு பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.

வடகாடு,

வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வாழைத்தாருக்கு போதியவிலை இல்லை. தற்போது, தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் விழா காலங்களில் மட்டும் வாழைக்கு உரிய விலை கிடைத்தது.

அதன்பின்ன மீண்டும் குறைவான விலைக்கே விற்று வருகிறது. .சில சமயங்களில் வாழைத்தார் ஒன்று ரூ.10-க்கு மட்டுமே விற்பனையாகுகிறது. வாழைத்தார் ஒன்றுக்கு தொழுஉரம், அடியுரம், விளைந்த பின் முட்டுக்கம்பு ஊன்றுதல் என ரூ.200 முதல் ரூ.250 வரை செலவு செய்யும் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

தற்போது, 20 கிலோ எடை கொண்ட வாழைத்தார் ஒன்று ரூ.100 முதல் ரூ, 120 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலை உள்ளது. விலை குறைவால் தார் வெட்டப்படாமல் வாழையிலேயே அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே .இப்பகுதிகளில் விளையும் வாழைத்தார்களை மதிப்பு கூட்டுதல் முறையில் விற்பனை செய்ய அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூக்கள் சாகுபடி

வடகாடு சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை, முல்லை, காட்டுமல்லிகை எனப்படும். காக்கரட்டான், கனகாம்பரம், பிச்சி, அரளி, ரோஜா, சம்பங்கி, சென்டி போன்ற பூச்செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இப்பகுதியில் சில சமயங்களில் பூக்கள் விலை குறைந்தும், சில சமயங்களில் அதிகரித்தும் காணப்படுகிறது. பூக்கள் விலை குறையும்போது, விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே இங்கு நறுமண பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கயிறு உற்பத்தி

இதேபோல் வடகாடு அருகே மாங்காடு, அனவயல், கொத்தமங்கலம், மறமடக்கி, சிட்டங்காடு, குளமங்கலம், ஆலங்குடி, கீரமங்கலம், கொடிகரம்பை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் கயிறு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதனை நம்பியுள்ள தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story