நில முறைகேடு வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு: முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்


நில முறைகேடு வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு: முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் - சித்தராமையா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Dec 2020 6:43 AM IST (Updated: 25 Dec 2020 6:43 AM IST)
t-max-icont-min-icon

நில முறைகேடு புகாரை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுத்துள்ள நிலையில் முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தினார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு,

முதல்-மந்திரி எடியூரப்பா சட்டவிரோதமாக அரசு நிலத்தை முறைகேடு செய்த புகாரை எதிர்கொண்டு உள்ளார். அவர் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய கர்நாடக ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. அவர் முறைகேடு செய்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக ஐகோர்ட்டு கூறியுள்ளது. ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை தீவிரமாக கருத வேண்டியது அவசியம்.

கர்நாடக தொழில் மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான நிலத்தை எடியூரப்பா அரசாணையில் இருந்து விடுவித்தார். இதில் தவறு நடந்திருப்பதாக கூறி லோக்அயுக்தா போலீசார் கடந்த 2015-ம் ஆண்டு எடியூரப்பா மீது வழக்கு பதிவு செய்தனர். லோக்அயுக்தா கோர்ட்டும் விசாரணை நடத்தியது. இதில் எடியூரப்பா 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவர் தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர் முதல்-மந்திரி பதவியில் நீடித்தால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணையின் போக்கை மாற்ற வாய்ப்பு உள்ளது. இந்த நில முறைகேடு வழக்கு விசாரணையை லோக்அயுக்தா கோர்ட்டின் மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு தனது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

விசாரணை மீது எடியூரப்பா தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது இதற்கு காரணம் ஆகும். எடியூரப்பா மீதான இந்த நில முறைகேடு புகார், ஊழலுக்கு எதிராக பேசி வரும் பிரதமரின் மோடியின் கண்களுக்கு தெரியவில்லையா?. எங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே மீதான இதே போன்ற நில முறைகேடு புகாரை ஐகோர்ட்டு ரத்து செய்துவிட்டது. இதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. ஆர்.வி.தேஷ்பாண்டே மீதான புகாருக்கும், எடியூரப்பாவுக்கு எதிரான நில முறைகேடு புகாருக்கும் வேறுபாடு உள்ளது. இதை ஐகோர்ட்டும் கூறியுள்ளது.

Next Story