மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம்


மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 25 Dec 2020 7:26 PM IST (Updated: 25 Dec 2020 7:26 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம் நடந்தது.

செம்பட்டி, 

ஆத்தூர் (மேற்கு) ஒன்றிய தி.மு.க. சார்பில், செம்பட்டி அருகே வீரக்கல் கிராமத்தில், அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில், கிராம சபை கூட்டம் நடந்தது. இ்தில், முன்னாள் அமைச்சரும், ஆத்தூர் எம்.எல்.ஏ.வுமான இ.பெரியசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் அடுத்த ஆண்டு(2021) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்றார். கூட்டத்தில், ஆத்தூர் (மேற்கு) ஒன்றிய செயலாளர் ராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் காணிக்கைசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கலிக்கம்பட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். இதில், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

பழனி அருகே உள்ள கோம்பைபட்டியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. பழனி ஒன்றியக்குழு தலைவர் ஈஸ்வரி கருப்புச்சாமி, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சுவாமிநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ. பேசுகையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு பாரபட்சம் காட்டி, நலத்திட்டங்கள் மறுக்கப்படுகிறது. மக்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது. அ.தி.மு.க. அரசில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் முடக்கப்பட்டுள்ளது என்றார்.

கூட்டத்தில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், ஆயக்குடி பேரூர் செயலாளர் கார்த்திகேயன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆசியாமரியம் ஷாஜகான், பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரம் வீடு வீடாக வினியோகிக்கப்பட்டது.

திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு தி.மு.க..ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். திண்டுக்கல் ஒன்றியக்குழு தலைவர் ராஜா, துணைத்தலைவர் பாஸ்கர், மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நத்தம் எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக மாற்ற வேண்டும் என்றும், பல்வேறு அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைப்பது குறித்தும் பொதுமக்கள் புகார் கூறினர். அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். முடிவில் ஒன்றிய கவுன்சிலர் செந்தில் நன்றி கூறினார்.

வத்தலக்குண்டு அருகே உள்ள ஜி.தும்மலப்பட்டியில் ஒன்றிய தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் கே.பி. முருகன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பிலால், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பரமேஸ்வரி முருகன், தி.மு.க. நிர்வாகிகள் கனிக்குமார், ராஜேந்திரன், கனகதுரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் .இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக குற்றப்பத்திரிகை என்ற துண்டு பிரசுரத்தை வழங்கினார்.

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் தி.மு.க.சார்பில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். இதில் திண்டுக்கல் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் சுப.பெருமாள்சாமி, சந்திரசேகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தாடிக்கொம்பு பேரூர் தி.மு.க. சார்பில் மறவபட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு தி.மு.க. செயலாளர் நாகப்பன் தலைமை தாங்கினார். இதில் தாடிக்கொம்பு பேரூராட்சி தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அகரம் பேரூர் தி.மு.க. சார்பில் கோட்டூர்ஆவாரம்பட்டியில் கிராமசபை நடைபெற்றது. இதற்கு அகரம் பேரூர் தி.மு.க. செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதுபோல மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம் நடந்தது.

Next Story