திண்டுக்கல்லில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்
திண்டுக்கல்லில், செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் யானைதெப்பம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நேற்று தொடங்கியது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், திண்டுக்கல்-மதுரை சாலையில் மக்கான் தெரு அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்கள் பகுதியில் நெருக்கமாக வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் அதன் கதிர்வீச்சால் எங்கள் பகுதியை சேர்ந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பாதிக்கப்படுவார்கள்.
மேலும் செல்போன் கோபுரம் அமைக்கப்படும் கட்டிடமும் உறுதி தன்மையுடன் தான் உள்ளதா? என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. ஒருவேளை கட்டிடம் உறுதி தன்மை இல்லாமல் இருந்தால் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே இங்கு செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பேசிய போலீசார், செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் கோர்ட்டு உத்தரவின் பேரிலேயே அந்த பணியை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story