ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மேலாளர் சிக்கியதன் எதிரொலி: பணியிடமாறுதலில் சென்ற ‘ஆவின்’ பொது மேலாளர் கைது


ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மேலாளர் சிக்கியதன் எதிரொலி: பணியிடமாறுதலில் சென்ற ‘ஆவின்’ பொது மேலாளர் கைது
x
தினத்தந்தி 25 Dec 2020 9:30 PM IST (Updated: 25 Dec 2020 9:30 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் ஆவினில் காசோலை வழங்க ஒப்பந்ததாரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கி மேலாளர் கைது செய்யப்பட்ட வழக்கில் பணியிட மாறுதலில் சென்ற நெல்லை ஆவின் பொதுமேலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

வேலூர், 

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அருகே உள்ள சொரக்குளத்தூரை சேர்ந்தவர் முருகையன் (வயது 50). இவர் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் குளிரூட்டும் மையத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பால் சப்ளை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான கமிஷன் ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்தை ஆவின் நிர்வாகம் வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளது.

ஓராண்டிற்கு மேலாகியும் கமிஷன் நிலுவை தொகை வழங்காததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகையன் வேலூர் ஆவின் பால் கொள்முதல் பிரிவு மேலாளர் ரவியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர், நிலுவை தொகைக்கான காசோலை கையெழுத்திட்டு தயாராக உள்ளது. ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனடியாக காசோலை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முருகையன் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுரையின்பேரில் அவர் நேற்று முன்தினம் ரசாயன பவுடர் தடவிய நோட்டுகள் அடங்கிய ரூ.50 ஆயிரத்தை ஆவின் அலுவலகத்தில் இருந்த மேலாளர் ரவியிடம் வழங்கினார். அப்போது அலுவலகத்துக்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக ரவியை (54) பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முருகையன் நிலுவை தொகைக்கான காசோலையில் வேலூர் ஆவின் பொதுமேலாளராக பணியாற்றிய கணேசா(56) கடந்த வாரம் நெல்லைக்கு பணியிட மாறுதலாகி செல்வதற்கு முன்பாக கையெழுத்திட்டுள்ளார். பின்னர் அதனை மேலாளர் ரவியிடம் வழங்கிய கணேசா, காசோலையை முருகையனிடம் வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெறும்படி வற்புறுத்தினார். அதன்பேரில் பணம் வாங்கினேன் என்று ரவி வாக்குமூலம் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து போலீசார் ரவியை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி குடியாத்தம் கிளை சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கணேசாவை காரில் அழைத்து வந்து நேற்று முன்தினம் நள்ளிரவு வேலூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், முருகையனிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதில் தொடர்பு இருப்பது உறுதியானது. அதையடுத்து கணேசா கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவருக்கு வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வேலூர் கோர்ட்டு முதன்மை மாஜிஸ்திரேட் ஆனந்த் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு குடியாத்தம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், முருகையனிடம் காசோலை வழங்க பொதுமேலாளர் கணேசா ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார். அதற்கு முருகையனும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் கணேசா கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் நெல்லைக்கு பணியிட மாறுதலாகி சென்று விட்டார். அதனால் முருகையனிடம் அந்த தொகையை மேலாளர் ரவியிடம் வழங்கும்படி கணேசா தெரிவித்துள்ளார். அந்த தொகையை ரவி வாங்கியபோது கையும், களவுமாக பிடிபட்டார்.

இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக பொதுமேலாளர் கணேசாவும், 2-வது குற்றவாளியாக மேலாளர் ரவியும் சேர்க்கப்பட்டுள்ளனர். வேலூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள ரவி வீட்டில் நடத்திய சோதனையில் எவ்வித பணமோ, ஆவணங்களோ பறிமுதல் செய்யப்படவில்லை. பொதுமேலாளர் கணேசா வேறு நபர்களிடம் இதுபோன்று லஞ்சம் பெற்றாரா? என்று விசாரணை நடத்தி வருகிறோம். அவரின் வங்கிக்கணக்கு, சொத்து மதிப்புகள் சேகரிக்கப்பட உள்ளன. முழுமையான விசாரணைக்கு பின்னரே அவர் வாங்கிய லஞ்சம், சொத்து குறித்த விவரங்கள் தெரிய வரும் என்று தெரிவித்தனர்.


Next Story