வேலூரில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றவர் வாக்குமூலம் எதிரொலி: கைதான நெல்லை ஆவின் பொதுமேலாளர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை
லஞ்ச வழக்கில் கைதான நெல்லை ஆவின் பொது மேலாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
கைது
வேலூர் ஆவினில் கொள்முதல் பிரிவு மேலாளராக பணியாற்றி வருபவர் ரவி. இவர் திருவண்ணாமலையை சேர்ந்த முருகையன் என்பவருக்கு பால் வினியோகம் செய்ததற்கு நிலுவை தொகை வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து லஞ்சப்பணம் பெறும் போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் ரவி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் வேலூர் ஆவினில் பொது மேலாளராக பணியாற்றிய கணேசா (வயது 56) கூறியதன் பேரில் லஞ்சப்பணம் வாங்கியதாக ரவி தெரிவித்தார்.
பொது மேலாளர் கணேசா கடந்த வாரம் வேலூரில் இருந்து நெல்லைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்குப்பிறகு காசோலை வழங்குவதற்காக தொடர்ந்து கணேசா ரூ.50 ஆயிரம் வசூலிக்கும் படி வற்புறுத்தியுள்ளார். அதன் பெயரிலேயே ரவி லஞ்சம் கேட்டுள்ளார்.
இந்த தகவலை பெற்றுக் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லை சென்று ஆவின் பொது மேலாளராக பணியாற்றி வரும் கணேசாவை கைது செய்தனர்.
ஜெயிலில் அடைப்பு
விசாரணையில், பொது மேலாளர் கணேசா, மேலாளர் ரவி இருவருக்கும் லஞ்சம் பெற்றதில் தொடர்பு இருப்பது உறுதியானது. பொதுமேலாளர் கணேசா, மேலாளர் ரவி இருவரும் நேற்று முன்தினம் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
வேலூர் ஆவினில் கணேசா நீண்ட காலமாக பணியாற்றி வந்துள்ளார். இந்த காலக்கட்டத்தில் அவர் அதிக லஞ்சப் பணம் வசூல் செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதனால் அவருடைய சொத்து விவரங்களையும், வங்கி கணக்கு போன்றவற்றையும் ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.
வேலூர், பெங்களூரு வீடுகளில் சோதனை
பொது மேலாளர் கணேசா வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டில் நேற்று முன்தினம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதேபோல் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள தாவங்கிரியில் உள்ள ஆவின் பொது மேலாளர் கணேசாவின் சொந்த வீட்டில் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் சோதனை நடைபெற்றது.
நேற்று முன்தினம் மாலை முதல் விடிய, விடிய இந்த சோதனை நடந்தது.
வீட்டில் இருந்த பணம், நகை, சொத்து ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், ஆவின் பொதுமேலாளர் கணேசா வாடகைக்கு தங்கியிருந்த சத்துவாச்சாரி வீடு மற்றும் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்த நகை, பணம் போன்றவற்றுக்கு போதுமான கணக்கு உள்ளது. இதனால் எதுவும் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்படவில்லை என்றனர்.
Related Tags :
Next Story