கிறிஸ்துமஸ் பண்டிகை: சிவகங்கை மாவட்ட தேவாலயங்களில் விடிய, விடிய சிறப்பு பிரார்த்தனை; திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் விடிய, விடிய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, காளையார்கோவில், இடைக்காட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின்ராயன் தலைமையில் உதவி பங்குத் தந்தை ஜாலிமரிவளன், முன்னாள் உதவி பங்குத்தந்தை ஒனாசியஸ்பிரபாகரன் ஆகியோர் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு பேரவையினர், அனைத்து பணிக்குழுவினர் ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல் காரைக்குடி செஞ்சை புனித தெரசாள் ஆலயத்தில் பங்குத்தந்தை சகாயராஜ் தலைமையிலும், காரைக்குடி அருகே அரியக்குடி வளன்நகர் குழந்தை ஏசு ஆலயத்தில் பங்குத்தந்தை அருள்ஜோதி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. காரைக்குடியை அடுத்த ஆவுடைப்பொய்கை தூய அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ராஜமாணிக்கம் தலைமையிலும், மானகிரி தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெரால்டுஜோசப் தலைமையிலும், தளக்காவூர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெரால்டுஜோசப் தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தேவகோட்டை தூய சகாய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெகநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கை, காளையார்கோவில்
காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தில் பங்குத்தந்தை சூசைஆரோக்கியம் மற்றும் அருட்தந்தை ஜோசப்செங்கோல் தலைமையில் 5 அருட்தந்தையர்கள் இணைந்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்கள். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். காளையார்கோவில் அருகே மருதகண்மாயில் உள்ள புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் அருட்தந்தை ஸ்டானி சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். சிவகங்கை புனித அலங்கார அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜேசுராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதேபோல் காளையார்கோவில் அருகே உள்ள வலையம்பட்டி புனித ஜெபஸ்தியார் ஆலயத்தில் அருட்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் போஸ்கோ மையம் தூய சகாய அன்னை பங்கில் சிறப்பு திருப்பலியை பங்குத்தந்தை ஜார்ஜ், உதவி பங்குத்தந்தையர்கள் மார்டின், டேனியல், பிரான்சிஸ், லூர்து ஆகியோர் புலியடிதம்மம், பள்ளித்தம்மம், கல்லுவழி, நெடுங்குளம், நெடோடை ஆகிய கிராமங்களில் உள்ள ஆலயங்களில் நள்ளிரவு திருப்பலியை நிறைவேற்றினர். ஆண்டிச்சியூரணி புனித அடைக்கல மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை தைரியநாதன் தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. சாத்தரசன்பட்டி புனித பனி மைய மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை அருள்ஜோசப் தலைமையில் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர்.
கல்லல்
கல்லல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையைெயாட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கல்லல், மாதவராயன்பட்டி, முத்துப்பட்டி, பனங்குடி, சாத்தர சம்பட்டி, காடனேரி, பாகனேரி உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவு 12 மணி முதல் விடிய, விடிய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அசெம்பிளி ஆப் காட் திருச்சபையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் போதகர் யோகு சரவணன் கலந்து கொண்டு ஜெபம் நடத்தினார். சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை மாவட்ட சேர்மன் பொன்.மணி பாஸ்கரன் கலந்து கொண்டார். இதில் ஏ.ஜி திருச்சபை பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story