வைகுண்ட ஏகாதசி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


வைகுண்ட ஏகாதசி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 26 Dec 2020 4:34 AM IST (Updated: 26 Dec 2020 4:34 AM IST)
t-max-icont-min-icon

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் புகழ்பெற்ற வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலி்ல் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டு கருட வாகனத்தில் உறசவர் வைகுண்ட பெருமாள் எழுந்தருளி 4 ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது..

நேற்று அதிகாலை 4 மணியளவில் சொர்க்க வாசலானது திறக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கருட சேவை உற்சவம் ரத்து செய்யப்பட்டதால் வைகுண்ட பெருமாள் உற்சவர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் மட்டும் வலம் வந்து காட்சியளித்தார்.

இதேபோல் காஞ்சசீபுரம் ரங்கசாமி குளம் அருகே உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை 5 மணி அளவில் மேள தாளங்கள் முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

பக்தர்கள் தரிசனம் இல்லை என்று அறிவிக்கப்பட்டதால் கோவில்களில் பக்தர்கள் கூட்டமின்றி காணப்பட்டது.

செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவிலில் பல்லவர் காலத்து குடவரை கோவில்களில் ஒன்றான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் நேற்று அதிகாலை 3.45 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது நரசிம்ம பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவ கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி வெளியே வந்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷங்கள் எழுப்பியபடி பெருமாளை வணங்கினர். மறைமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையில் பலத்த போலீிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவசண்முக பொன்மணி, மேனேஜர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.

இதுபோல செங்கல்பட்டு அண்ணாசாலையில் அமைந்துள்ள வேதாந்த தேசிகர் சீனுவாசபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு மூலவர் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சோ.செந்தில்குமார் செய்திருந்தார்.

Next Story