துணை தலைவரை தரையில் அமர வைத்த சம்பவம்: வாணிக்கரை ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்டு முற்றுகையிட்ட பொதுமக்கள்
துணைத்தலைவரை தரையில் அமர வைத்த சம்பவத்தை தொடர்ந்து வாணிக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பொதுமக்கள் பூட்டு போட்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
குஜிலியம்பாறை,
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம் வாணிக்கரை ஊராட்சி தலைவராக இருப்பவர் பேபி. துணைத் தலைவராக ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த பெருமாயி என்பவர் உள்ளார். இந்நிலையில் கடந்த 22-ந்தேதி துணைத்தலைவர் பெருமாயி மற்றும் 3-வது, 4-வது வார்டு ஊராட்சி உறுப்பினர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அதில், வாணிக்கரை ஊராட்சிமன்ற கூட்டத்தின்போது நாங்கள் தரையில் அமர வைக்கப்படுகிறோம். துணைத் தலைவர் மற்றும் ஒரு சில உறுப்பினர்களிடம் கருத்து கேட்பது இல்லை. எந்த திட்டம் பற்றியும் விவாதிப்பது இல்லை. அதேபோல் ஊராட்சியில் நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கு கையெழுத்து பெறுவதில்லை. இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். இந்த புகார் மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த துணைத்தலைவர் பெருமாயி மற்றும் பொதுமக்கள் வாணிக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. இந்த பூட்டுக்கு மேல் கூடுதலாக ஒரு பூட்டை போட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், சம்பவ இடத்திற்கு மாவட்ட கலெக்டர் நேரடியாக வர வேண்டும் என கோஷமிட்டனர்.
இதையடுத்து குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story