ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியது போல் தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முடியும் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி


ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியது போல் தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முடியும் - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 26 Dec 2020 9:39 PM IST (Updated: 26 Dec 2020 9:39 PM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியதுபோல் தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முடியும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

பெரம்பலூர், 

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் ேமற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இதையொட்டி குழுமூரில் உள்ள அனிதா நினைவு நூலகத்திற்கு வந்த அவர், ‘நீட்’ தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது.

அனிதா மரணத்திற்கு பின்னர் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும். தி.மு.க. கிராம சபை கூட்டங்களில் மக்கள் தன்னெழுச்சியாக கலந்து கொள்கிறார்கள். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அரசு, அதற்கு தடை விதித்தது. தி.மு.க. தலைவர் சொன்னது போல், மக்கள் கிராம சபை என்ற பெயரில் கூட்டம் நடைபெறும். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியது போல் தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செந்துறை சென்ற உதயநிதி ஸ்டாலின், அங்கு அண்ணா சிலை முன்பாக பொதுமக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசுைகயில், ‘நீட்’ தேர்வால் முதலில் பாதிக்கப்பட்டது அரியலூர் மாவட்டம். 4 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ கனவில் இருந்த குழுமூர் அனிதா, ‘நீட்’ தேர்வால் தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில் எலந்தங்குழி விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டார். ‘நீட்’ தேர்வை எப்படி ரத்து செய்ய முடியும் என்று கேட்கிறார்கள். இந்தியா முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு தடை இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் தடையை நீக்கவில்லையா. அதேபோல் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும். சசிகலாவால் முதல்-அமைச்சராகி, அவருடைய காலையே வாரி விட்டவர் எடப்பாடி பழனிசாமி.

பிரதமருக்கு தமிழகத்தை பிடிக்காது. அதற்கு காரணம், அவர் இங்கு வந்தால் ‘கோ பேக்’ மோடி என்பீர்கள். நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் தான் தீவிரமாக வேலை செய்ய வேண்டும், என்றார்.பிரசாரத்தில் மாவட்ட செயலாளர் சிவசங்கர், செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்பட ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் வட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், குன்னத்தில் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து பேசினார். மேலும் பரவாய் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த புத்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வடக்கலூரில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்ததால், பிரசார வேனில் நின்று கொண்டு பேசினார். முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா எம்.பி. உடனிருந்தார். இதையடுத்து ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் பிரசாரத்தை முடித்து கொண்டு, இரவு 7.30 மணியளவில் பெரம்பலூர் தாலுகா கீழக்கணவாய் கிராமத்திற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின், அங்கு நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் திறந்த வேனில் நின்று கட்சியினர், பொதுமக்களிடையே பேசினார்.பின்னர் பெரம்பலூருக்கு புறப்பட்டு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு செஞ்சேரியில் தி.மு.க.வினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து திறந்த வேனில் நின்று கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின் சார்பில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர், காந்தி, பெரியார் சிலைகளுக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து காமராஜர் வளைவில் கட்சியினர், பொதுமக்களிடையே உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

பிரசாரத்தின்போது அவர் பேசுகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கட்சியின் தலைவர் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சுமார் 17 ஆயிரம் கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரம் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று உள்ளது. வடக்கலூர் ஊராட்சியில் உங்களை சந்திக்க வந்தேன். ஆனால் தமிழக அரசு தடைவிதித்து விட்டது. என்னை கைது செய்தாலும் பரவாயில்லை. உங்களை சந்திக்காமல் போகக்கூடாது என்று முடிவு செய்து இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன். இந்த அடிமை அரசு ‘நீட்’ தேர்வுக்கு ஆதரவாக உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ‘நீட்’ தேர்வை தடை செய்யும். சசிகலா விடுதலையான பிறகு அ.தி.மு.க.வில் பெரிய மாற்றம் ஏற்படும். எடப்பாடி பழனிசாமி சசிகலாவிடம் சரணடைந்து விடுவார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வை ஓட, ஓட விரட்டினீர்கள். அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும். பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி, சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும். ரெயில்வே போக்குவரத்து கொண்டு வரப்படும். இது அனைத்தும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். 234 தொகுதிகளிலும் ஜெயிக்க முயற்சிப்போம், என்றார்.பின்னர் அவர் பாடாலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அரிபாஸ்கர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை. பெரம்பலூர் ஒன்றியக்குழு தலைவர் மீனா அண்ணாதுரை, ஒன்றியக்குழு துணை தலைவர் சாந்தாதேவி குமார், மருத்துவ அணி டாக்டர் செங்குட்டுவன், மாவட்ட வர்த்தக அணி கே.சி.ஆர்.குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சித்ராதேவி குமார் (எளம்பலூர்), அகிலா ராமசாமி (இலந்தங்குழி), ரேவதி சுரேஷ்குமார் (சிறுவயலூர்) மற்றும் வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீசன், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, வேப்பந்தட்டை ஒன்றிய தலைவர் ராமலிங்கம் மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள், இளைஞரணி, மகளிரணி, மருத்துவரணி, வர்த்தக அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உதயநிதி ஸ்டாலினுக்கு நன்னையில் வேப்பூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், வேப்பூர் ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, ஒன்றிய செயலாளர் மதியழகன், பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், வேப்பூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்புக்குழு உறுப்பினரும், ஒகளூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான மீனா அன்பழகன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

Next Story