ஆண்டிமடம் அருகே மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த வக்கீல் சாவு - நாய் குறுக்கே சென்றதால் பரிதாபம்
ஆண்டிமடம் அருகே நாய் குறுக்கே சென்றதால், மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த வக்கீல் பரிதாபமாக இறந்தார்.
ஆண்டிமடம்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அகரம் கிராமத்தில் உள்ள பட்டித்தெருவை சேர்ந்தவர் திருமாவளவன் (வயது 33). வக்கீலான இவர் சம்பவத்தன்று சொந்த வேலையின் காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் ஆண்டிமடம் வந்துவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அகரம் கிராமம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக நாய் ஒன்று சாலையின் குறுக்கே சென்றதால், அதன் மீது மோதாமல் இருக்க திருமாவளவன் பிரேக் பிடித்தார். அப்போது நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் அருகில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற விழுந்தார்.
இதில் தலை மற்றும் உடலில் அடிபட்ட நிலையில் அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆண்டிமடம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்துவிட்டார் என்று கூறினார். இது குறித்து திருமாவளவனின் தாய் சரோஜா ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story