புத்தாண்டில் இருந்து கலாம் மணிமண்டபத்தை பார்வையிட அனுமதிக்க வேண்டும்; ராமேசுவரம் மக்கள் கோரிக்கை


ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் மணிமண்டபம் மூடப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்
x
ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் மணிமண்டபம் மூடப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்
தினத்தந்தி 27 Dec 2020 3:15 AM IST (Updated: 27 Dec 2020 3:15 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு தொடக்கமான வருகிற 1-ந் தேதியில் இருந்து அப்துல்கலாம் மணிமண்டபத்தை பார்வையிட அனுமதிக்க வேண்டும் ராமேசுவரம் மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கலாம் மணிமண்டபம்
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் அருங்காட்சியகம் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் மூடப்பட்டன.

9 மாதத்திற்கு பிறகு கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டதுடன் கடற்கரை பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல அரசு அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து ராமேசுவரம் அக்னிதீர்த்த கடல் மற்றும் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்ட போதிலும் ராமேசுவரம் தங்கச்சிமடம் பேய்க்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு இன்னும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

கோரிக்கை
இதனால் ராமேசுவரம் வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள், மாணவர்கள் அப்துல் கலாம் மணிமண்டபம் உள்ளே சென்று கலாமின் பல்வேறு சாதனைகள் அடங்கிய புகைப்படங்களை பார்க்க முடியாமலும் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முடியாமலும் வாசலில் நின்றபடி மணிமண்டப கட்டிடத்தை மட்டும் பார்த்துவிட்டு மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

எனவே வருகிற புத்தாண்டு தொடக்கமான வருகிற 1-ந் தேதியில் இருந்தாவது அப்துல்கலாம் மணிமண்டபம் மற்றும் பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் மணிமண்டபத்துக்கு பார்வையாளர்கள் வழக்கம்போல் சென்றுவர மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story