புயல், மழையால் சாய்ந்த கரும்புகளை நிமிர்த்தி கட்டியதால் 3 மடங்கு கூடுதல் செலவு விவசாயிகள் வேதனை


புயல், மழையால் சாய்ந்த கரும்புகளை நிமிர்த்தி கட்டியதால் 3 மடங்கு கூடுதல் செலவு விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 26 Dec 2020 10:48 PM GMT (Updated: 26 Dec 2020 10:48 PM GMT)

புயல், மழையால் சாய்ந்த கரும்புகளை நிமிர்த்தி கட்டியதால் 3 மடங்கு கூடுதல் செலவானதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

தா.பழூர்,

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் சமயத்தில் அறுவடை செய்யும் வகையில் கரும்பு பயிரிடப்படுவது வழக்கம். அதன்படி அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொங்கலுக்காக செங்கரும்புகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. தா.பழூர் பகுதியில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த பொற்பொதிந்தநல்லூர், சிலால், அனைகுடம், காரைகுறிச்சி, அருள்மொழி, மதனத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செங்கரும்பு விளைவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு செங்கரும்புகள் நன்கு விளைந்து வந்தன.

இந்நிலையில் ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல்களால் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் கரும்புகள் சாய்ந்தன. விவசாயிகள் கூலி ஆட்களை கொண்டு கரும்புகளை நிமிர்த்தி கட்டும் பணிகளை செய்தனர். இவ்வாறு இரண்டு முறை வயல்களில் சாய்ந்த கரும்புகளை நிமிர்த்தி கட்டிய நிலையில், அப்பகுதியில் பெய்த மழையால் மீண்டும் கரும்புகளை சாய்ந்தது. இதையடுத்து கரும்புகள் நமிர்த்தி கட்டப்பட்டன.

பொங்கல் பரிசு தொகுப்புடன்...

இதனால் வழக்கமாக செங்கரும்பு உற்பத்திக்கு செய்யும் செலவை போல் 3 மடங்கு கூடுதல் செலவு செய்து இருப்பதாகவும், நாங்கள் உற்பத்தி செய்த கரும்பு இனிக்கிறது, ஆனால் எங்கள் வாழ்க்கை கசப்பாக உள்ளது, என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். கரும்புகளை நிமிர்த்தி கட்ட ஒவ்வொரு ஏக்கருக்கும் தலா ரூ.40 ஆயிரம் வரை கூடுதல் செலவு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் பரிசு தொகுப்புடன் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முழு கரும்பு ஒன்றை இலவசமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு கரும்பு கொள்முதல் செய்யும்போது, தங்களிடம் நேரடியாக கொள்முதல் செய்து உரிய விலை வழங்கினால் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்யும் வகையில் விலை வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story