ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு நபர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி வழக்கு: குண்டர் சட்டத்தில் சாந்தா சுவாமிகள் கைது


சாந்தா சுவாமிகள்
x
சாந்தா சுவாமிகள்
தினத்தந்தி 27 Dec 2020 5:05 AM IST (Updated: 27 Dec 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

ஆன்மிக தொடர்பில் பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்ட திருவலம் சாந்தா சுவாமிகளை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

ஆன்மிக பணி
வேலூர் மாவட்டம், திருவலம் பகுதியை சேர்ந்தவர் சாந்த குமார் என்ற சாந்தா சாமியார் (வயது 44). இவர் திருவலத்தில் சர்வமங்களா பீடம் என்ற அமைப்பின் நிறுவனராக இருந்து வீட்டில் அம்மன் சிலை வைத்து பூஜை நடத்தி, ஆன்மிகப் பணி செய்து வந்தார்.

பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு ஆன்மிக உரைகளை நிகழ்த்தி வந்தார். மேலும் தமிழகம் மட்டுமல்லாது மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்துள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆற்காடு பகுதியை சேர்ந்த ஹரிஷ் குமார் என்பவர் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தான் ஆன்மிகத்தில் நாட்டம் உள்ளவர் எனவும், இதனால் ஏற்பட்ட ஆன்மிக தொடர்பில், திருவலத்தை சேர்ந்த சாந்தா சுவாமிகள் ரூ.15 லட்சம் கடனாகப் பெற்றிருந்தார். அதனை அவர் நீண்ட நாட்களாக திருப்பி தரவில்லை என தெரிவித்திருந்தார். இதேபோல் ஹரிஷ் குமாரின் உறவினரான முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பென்ஸ் பாண்டியன் என்பவர் தன்னிடம் பெற்ற ரூ.15 லட்சத்தை சாந்தா சுவாமிகள் திருப்பித்தரவில்லை எனவும், பணத்தை திருப்பி கேட்டால் சூனியம் வைத்து விடுவேன் என்று மிரட்டுவதாகவும் புகார் அளித்திரு்தார்.

ஏமாற்றினார்
மேலும் வாலாஜா பகுதியை சேர்ந்த கேசவமூர்த்தி என்பவரிடம் ரூ.45 லட்சம் வாங்கிக்கொண்டு பல மடங்காக திருப்பி தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

ஆனால் பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இவரும் ராணிப்பேட்டைமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்திருந்தார்.

ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருக்கும் ஆன்மிக ரீதியாக திருவலம் சாந்தா சுவாமியிடம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பிறகு இவர்கள் இருவருக்கும் கொடுக்கல்-வாங்கல் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பெங்களூருவை சேர்ந்த ஒரு முக்கிய நபருடன் இணைந்து தொழில் செய்தால் பல மடங்கு லாபம் வரும் என்று கூறி சங்கரிடம் இருந்து ரூ.10 லட்சம் சாந்தா சுவாமிகள் பெற்றுள்ளதாகவும் அதையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இவரும் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

கைது
இதேபோல் பலரிடமும் சாந்தா சுவாமிகள் பண மோசடியில் ஈடுபட்டு பல லட்சங்கள் ஏமாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து வாலாஜா சிறையில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் பல்வேறு நபர்களிடம் பண மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சாந்தகுமார் என்ற சாந்தா சுவாமிகளின், குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பரிந்துரை செய்தார். இதனையடுத்து சாந்தா சுவாமிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டார். இதனையடுத்து சாந்தா சுவாமிகள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆன்மிகப் பணியில் ஈடுபட்டு வந்த, சாந்தா சுவாமிகள் பண மோசடி வழக்குகளில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story