கரும்பை துண்டுகளாக கொடுக்கக் கூடாது: பொங்கல் பரிசை குளறுபடி இன்றி வழங்க வேண்டும்; வேலூர் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் அறிவுறுத்தல்


பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் தலைமையில் நடந்தபோது
x
பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் தலைமையில் நடந்தபோது
தினத்தந்தி 27 Dec 2020 5:43 AM IST (Updated: 27 Dec 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசை குளறுபடி இன்றி வழங்க வேண்டும். கரும்பை துண்டுகளாக கொடுக்கக் கூடாது என்று வேலூரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் திருகுண அய்யப்பதுரை கூறினார்.

ஆலோசனை கூட்டம்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்ட துணைப்பதிவாளர் முனிராஜ், பொதுவினியோக திட்ட துணைப்பதிவாளர் முரளிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு வேலூர் கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் திருகுண அய்யப்பதுரை தலைமை தாங்கி பேசியதாவது:-

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ரேஷன் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடித்து பொங்கல் பரிசை வினியோகம் செய்ய வேண்டும். அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசை குளறுபடி இன்றி வழங்க வேண்டும்.

கரும்பை துண்டுகளாக கொடுக்க கூடாது
ரூ.2,500-ஐ கவரில் வைத்து கொடுக்காமல், வெளிப்படையாக சம்பந்தப்பட்டவரிடம் பணத்தை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கும் முழு நீள கரும்பு வழங்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் கரும்பை துண்டுகளாக கொடுக்க கூடாது. ஒரே நாளில் அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன் தற்போது வீடு, வீடாக வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் ஒவ்வொரு நாளும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கக்கூடிய டோக்கன் எண்கள் பற்றிய முழு விவரங்களை அட்டவணையில் எழுதி வைக்க வேண்டும். குறிப்பிட்ட நாளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியாத நபர்களுக்கு ஜனவரி 13-ந் தேதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் டோக்கன் எண்கள் பற்றிய விவரங்களை எழுதி வைப்பதற்கான பதாகை வழங்கப்பட்டது.

இதில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story