கர்நாடகத்தில் 2-வது கட்டமாக இன்று நடக்கிறது 2,709 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் - பலத்த போலீஸ் பாதுகாப்பு


கர்நாடகத்தில் 2-வது கட்டமாக இன்று நடக்கிறது 2,709 கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் - பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 27 Dec 2020 6:25 AM IST (Updated: 27 Dec 2020 6:25 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 2-வது கட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2,709 கிராம பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெங்களூரு,

கர்நாடகத்தில் டிசம்பர் 22 மற்றும் 27-ந் தேதிகளில் 2 கட்டமாக கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

கடந்த 22-ந் தேதி பெங்களூரு புறநகர் உள்பட மாநிலம் முழுவதும் முதற்கட்ட கிராம பஞ்சாயத்து தேர்தல் விறு, விறுப்பாகவும், அமைதியான முறையிலும் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில், 2-வது கட்ட கிராம பஞ்சாயத்து தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவு பெற்றது. நேற்று வீடு, வீடாக சென்று வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வேட்பாளர்கள், அவரது ஆதரவாளர்கள் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், 2-வது கட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் கிராம பஞ்சாயத்து தேர்தலுக்காக மாநில தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறது. ஒட்டு மொத்தமாக 109 தாலுகாக்களில் 2,709 கிராம பஞ்சாயத்துகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. ஒட்டு மொத்தமாக 39 ஆயிரத்து 378 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

2-வது கட்ட கிராம பஞ்சாயத்துகளில் ஒட்டு மொத்தமாக 43 ஆயிரத்து 291 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அவற்றில் 3 ஆயிரத்து 697 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் முன்பாகவே, அந்த பதவிகளுக்கான தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, 2-வது கட்ட தேர்தலில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 431 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கிராம பஞ்சாயத்து தேர்தலில் வாக்காளர்களை கவரும் விதமாக வேட்பாளர்கள் நேற்று பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் தங்க மூக்குத்தி, வெள்ளி ஆபரணங்கள் தருவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசியபடி நேற்று வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். சில வேட்பாளர்கள் பெண்களை கவரும் விதமாக பட்டு சேலைகளை பரிசாக வழங்கினார்கள்.

அதே நேரத்தில் இன்று நடைபெறும் 2-வது கட்ட கிராம பஞ்சாயத்து தேர்தலை அமைதியான முறையில் நடத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளின் உத்தரவின் பேரில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க முன் எச்சரிக்கையாக சில கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், கிராம பஞ்சாயத்து தேர்தலுக்காக, தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், அதிகாரிகள் தாங்கள் செல்ல வேண்டிய வாக்குச்சாவடிகளுக்கு போவதற்காக சிறப்பு பஸ் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் 109 தாலுகாக்களுக்கும் 1,615 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, தேர்தல் பணிகளுக்காக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ராமநகர்-73, துமகூரு-167, கோலார்-107, சிக்கபள்ளாப்பூர்-169, மண்டியா-145, சாம்ராஜ்நகர்-184, ஹாசன்-48, சிக்கமகளூரு-79, மங்களூரு-105, புத்தூரு-127, தாவணகெரே-88, சிவமொக்கா-149, சித்ரதுர்கா-133 என ஒட்டு மொத்தமாக 1,615 பஸ்கள் கிராம பஞ்சாயத்து தேர்தலுக்காக இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் 2 கட்டமாக நடைபெறும் கிராம பஞ்சாயத்துகளுக்கான தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது.

Next Story