விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது 9½ பவுன் நகைகள் மீட்பு
விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 9½ பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
விழுப்புரம்,
விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகேஸ்வரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், பிரபு, ராஜலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு தேவநாதன் மற்றும் போலீசார் நேற்று விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் சந்தேகத்தின்பேரில் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தியதில் அவர்கள் இருவரும் அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் ஆனந்த்பாபு (வயது 19), புதுப்பாளையம் நடுத்தெருவை சேர்ந்த கரும்பாயிரம் மகன் சூர்யா (20) என்பதும், இவர்கள் இருவரும் விழுப்புரம் தாலுகா போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் 2 இடங்களிலும், விக்கிரவாண்டி பகுதியில் ஒரு இடத்திலும் வீடு புகுந்து நகை திருடியதும், விழுப்புரம் நகரில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து ஆனந்த்பாபு, சூர்யா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 9½ பவுன் நகைகளையும் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story