ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்; மாமல்லபுரம் விடுதிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த தடை; போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன்
x
செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன்
தினத்தந்தி 28 Dec 2020 2:18 AM IST (Updated: 28 Dec 2020 2:18 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிகளில் புத்தாண்டையொட்டி கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவும், கடற்கரையில் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கூறினார்.

புத்தாண்டு நெறிமுறை கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல்கள், விடுதிகள், கடற்கரை பண்ணை வீடுகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து அவற்றின் இயக்குனர்கள், உரிமையாளர்களை அழைத்து போலீஸ் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் பேசியதாவது:-

கொரோனா தொற்றி்ன் இன்னொரு அலை தற்போது இங்கிலாந்தில் வேறு வைரஸ் ரூபத்தில் புதிய வைரசாக உருவாகி பரவி வருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு இ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மது விருந்துடன் கூடிய கேளிக்கை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல்களுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் கூட தடை
பண்ணை வீடுகள், நட்சத்திர விடுதிகளில் பின்புறம் உள்ள கடற்கரையில் கூடுவதற்கும் தடை விதிப்பட்டுள்ளது. அதேபோல் கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்;ததிற்கு வருபவர்கள் வருகிற 31-ந்தேதி இரவு 10 மணிக்குள் அந்தந்த விடுதிகளில் வந்து தங்கி விடவேண்டும்.

அறைகளில் தங்குவதற்கும், உணவகங்களுக்கு செல்வதற்கும் எந்தவித தடையும் இல்லை. உணவு சாப்பிட்டு விட்டு விருந்தினர்கள் யாரும் தங்கள் அறைகளை விட்டு வெளியே வரக்கூடாது. அதேபோல் நீச்சல் குளங்கள் செயல்படுவதற்கும் அனுமதி கிடையாது. வாண வேடிக்கை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அறைகளிலேயே அவரவர்கள் புத்தாண்டு கொண்டாட வேண்டும். வெளியே வரக்கூடாது.

உரிமம் ரத்து செய்யப்படு்ம்
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை பகுதிகளில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாடத்தின்போது இ.சி.ஆர். சாலையில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். மதுபோதையில் பெண்களை கிணடல், கேலி செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் 10 தற்காலிக சோதனை சாவடிகள் மூலம் கடுமையாக வாகன தணிக்கை செய்யப்படும்.

திருப்பி அனுப்பப்படுவார்கள்
மாமல்லபுரம் முதல் முட்டுக்காடு வரை இ.சி.ஆர். சாலையில் உள்ள 500 கண்காணிப்பு கேராக்களில் பதிவாகும் காட்சிகள் போலீசார் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். வரும் 31-ந் தேதி மாலை 6 மணி முதல் முட்டுக்காடு சோதனை சாவடி் அருகில் இரு சக்கர வாகனங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் வாலிபர்கள் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்கள் மாமல்லபுரம் செல்ல அனுமதி கிடையாது.

குடும்பத்துடன் இரு சக்கர வாகனத்தில் வருபர்கள் மாமல்லபுரம் செல்ல வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் வரவேற்பு அறையில் உள்ள கண்காணிப்பு கேமரா கண்டிப்பாக இயங்க வேண்டும்.

அடையாள அட்டை
அறைகளில் தங்க வரும் விருந்தினர்களிடம் ஆதார் அட்டை, தேர்தல் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை பெற்று்கொண்டே ஓட்டல் நிர்வாகங்கள் அறைகள் ஒதுக்கி தரவேண்டும். தனியாக வரும் நபர்களுக்கு அறைகள் வழங்க கூடாது. குறிப்பாக அடையாள அட்டை சமர்ப்பிக்காத நபர்களுக்கு அறைகள் கொடுக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடும் எச்சரிக்கை
மேலும் கடந்த புத்தாண்டு பிறப்பின்போது இரவு 12 மணிக்கு மேல் அறிவிக்கப்பட்ட நேரத்தை மீறி வாலிபர்களும், இளம்பெண்களும் பங்கேற்ற மது விருந்துடன் கூடிய கேளிக்கை நிகழ்ச்சி நடத்திய மாமல்லபுரம் ஐந்துரதம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் பொது மேலாளரை கூட்டத்தில் அழைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கடும் எச்சரிக்கை செய்தார்.

இந்த கூட்டத்தில் மாமல்லபுரம் உதவி போலீஸ் சூபபிரண்டு சுந்தரவதனம், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் மாமல்லபுரம் ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதி, பணணை வீடுகள் உரிமையாளர்கள், இயக்குனர்கள், பொது மேலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story