கர்நாடகத்தில் 2020-ம் ஆண்டின் மறக்க முடியாத நிகழ்வுகள்; வைரஸ் பரவலால் விண்வெளி ஆராய்ச்சி பாதிப்பு


கர்நாடகத்தில் 2020-ம் ஆண்டின் மறக்க முடியாத நிகழ்வுகள்; வைரஸ் பரவலால் விண்வெளி ஆராய்ச்சி பாதிப்பு
x
தினத்தந்தி 28 Dec 2020 4:04 AM IST (Updated: 28 Dec 2020 4:04 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 2020-ம் ஆண்டு மறக்க முடியாத நிகழ்வுகளாக கொரோனா, வெள்ளம், பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) நெருக்கம் ஆகியவை முக்கியமாக கவனத்தை ஈர்த்தது. மேலும் வைரஸ் பரவலால் விண்வெளி ஆராய்ச்சியும் பாதிக்கப்பட்டது.

முட்டுக்கட்டை
நடப்பு (2020) ஆண்டு அடுத்த சில நாட்களில் நம்மிடம் இருந்து விடை பெற்று கடந்த கால வரலாற்றில் இடம் பிடிக்க போகிறது. இந்த ஆண்டு உலகம் உள்ளவரை நினைவு கூறப்படும். அந்த அளவுக்கு நாம் மறக்கவே முடியாத பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டு செல்கிறது. அதாவது கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு அனைத்து தரப்பினருக்கு ஒரு கருப்பு ஆண்டாகவே இருக்கிறது. ஆனால் கர்நாடகத்தில் கொரோனாவுடன் பெருவெள்ளம் ஏற்பட்டு பெரிய பாதிப்புகளும் ஏற்பட்டன. அதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுத்தி, மக்களை வேதனையில் ஆழ்த்தின. நடப்பு ஆண்டில் கர்நாடகத்தில் சில மறக்க முடியாத நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

கர்நாடகம் தொழில் முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக திகழ்கிறது. இங்கு இன்போசிஸ், விப்ரோ போன்ற பெரிய சாப்ட்வேர் உற்பத்தி நிறுவனங்களின் தலைமையகம் அமைந்துள்ளது. ஆனால் கர்நாடகத்தில் டொயோட்டா, விஸ்டார்ன் உள்ளிட்ட தனியார் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இதில் சம்பள பிரச்சினை காரணமாக விஸ்டார்ன் ஊழியர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இதை கண்டு பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். இது கர்நாடகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடுமோ என்ற அச்சம் ஆட்சியை நடத்துபவர்கள் மற்றும் அதிகாரிகள் இடையே எழுந்தது.

அதிகளவில் பரிசோதனை
கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் போராட்டங்கள் நடப்பது நின்றுபோனது. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களும் முடிவுக்கு வந்தன. சில இடங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவான முழக்கங்களும் எழுந்தன. இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு கொரோனா பரவல் தொடங்கியது, நாட்டிலேயே கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு கர்நாடகத்தில் பதிவானதை அடுத்து, அரசின் முழு கவனமும் அந்த வைரசை கட்டுப்படுத்துவதில் சென்றது.

தொடக்கத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கர்நாடகம் சிறந்து விளங்கியது. ஆனால் செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்குள், நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதிக்கும் மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகம் மாறியது. தினசரி வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி பதிவானது. ஆனால் அதிகளவில் பரிசோதனை மேற்கொண்டது, தீவிரமான கட்டுப்பாடுகளை விதித்தது போன்ற அரசின் தீவிரமான நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது.

வெள்ளப்பெருக்கு
தற்போது தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. கர்நாடகத்தில் ஆகஸ்டு மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை கனமழை பெய்து, வட மாவட்டங்களில் பெரிய அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது. மராட்டியத்தில் உள்ள அணைகள் திறக்கப்பட்டதால், வட கர்நாடகத்தில் உள்ள பாகல்கோட்டை, விஜயாப்புரா உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தன. கிருஷ்ணா, பீமா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ரூ.15 ஆயிரத்து 410 கோடிக்கு சேதம் ஏற்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டு பாதிப்புகள் உண்டாயின.

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், காங்கிரசில் வந்தவர்களில் 10 எம்.எல்.ஏ.க்களுக்கு எடியூரப்பா மந்திரி பதவி வழங்கினார். எடியூரப்பாவுக்கு 77 வயதாகிவிட்ட காரணத்தால், அவரை மாற்றிவிட்டு வேறு ஒருவரை முதல்-மந்திரியாக நியமிக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய எடியூரப்பா அனுமதி கேட்டுள்ளார். ஒரு மாதத்திற்கு மேலாகியும் பா.ஜனதா மேலிடம் இதுவரை அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை.

தனிப்பெரும்பான்மை
தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்த பல மாதங்களுக்கு பிறகு கர்நாடக காங்கிரஸ் புதிய தலைவராக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்பட்டார். அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினர். இது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. நடப்பு ஆண்டில் கர்நாடக அரசு, வேளாண் சந்தைகள் திருத்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. பசுவதை தடை சட்டத்தை சட்டசபையில் மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. மேல்-சபையில் இன்னும் அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. அந்த மசோதாவை ஜனதா தளம் (எஸ்) ஆதரிக்காது என்று அக்கட்சி தெளிவாக கூறியுள்ளது. மேல்-சபையில் ஆளும் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் இன்னொரு முக்கிய விஷயமாக, போதைப்பொருள் வழக்கில் அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த வழக்கில் பிரபல நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் சஞ்சனா கல்ராணிக்கு மட்டும் ஜாமீன் கிடைத்துள்ளது. ராகிணி திவேதி இன்னும் சிறையில் தான் இருக்கிறார்.

ககன்யான் திட்டம்
கொரோனா பாதிப்பு விண்வெளி ஆராய்ச்சி மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரோ இந்த ஆண்டு 3 ராக்கெட்டுகளை மட்டுமே விண்ணுக்கு அனுப்பியுள்ளது. சந்திரயான்-3 திட்டத்திற்கு இன்னும் கால அட்டவணை முடிவு செய்யப்படவில்லை. நாட்டின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான ககன்யான் திட்டம் ஓராண்டு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை மத்திய அரசு அனுமதித்துள்ளது.

எதிரும்-புதிருமாக இருந்த பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் திடீரென மிக நெருக்கமாக மாறியுள்ளன. கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க ஜனதா தளம் (எஸ்) முடிவு செய்துள்ளது. ஆளும் பா.ஜனதாவுடன் ஜனதா தளம் (எஸ்) கட்சி இணைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை இரு கட்சிகளின் தலைவர்களும் மறுத்துவிட்டனர்.

Next Story