விழுப்புரம் மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டி மாநில தலைவர் எல்.முருகன் அறிவிப்பு


விழுப்புரம் மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டி மாநில தலைவர் எல்.முருகன் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Dec 2020 2:34 PM GMT (Updated: 28 Dec 2020 2:34 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் 3 சட்ட மன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க. அணி பிரிவு, பிரதிநிதிகள் மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் கலிவரதன், மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகன், மாநில பொதுச்செயலாளர் ராகவன் ஆகியோர் தலைமை தாங்கினர். விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் நரேஷ் குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜேந்திரன், ஜெயகுமார், பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில தலைவர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட வாய்ப்பு உள்ளது. விவசாயிகள் விளைவித்த பயிர்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் வகையில், வேளாண் சட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி கொண்டுவந்துள்ளார்.

இதையறிந்த தமிழக விவசாயிகள் இத்திட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்துள்ளனர். ஆனால் விவசாயிகள் முன்னேறக்கூடாது என நினைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் விவசாய சட்டங்கள் குறித்து தவறாக பிரசாரம் செய்கிறார். மேலும் கமிஷனுக்காக வியாபாரிகளுக்கு ஆதரவாக அவர்கள் பேசி வருகிறார்கள். இந்தியாவில் 2014-ம் ஆண்டிற்கு பிறகு விவசாயிகள் தற்கொலை தடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் கந்து வட்டி, கடன் பிரச்சனையில் இருந்து விடுபடும் வகையில் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரத்தை பிரதமர் மோடி வழங்கி வருகிறார்.

இந்து கடவுளுக்கு எதிராக தி.மு.க. உள்ளது. மு.க.ஸ்டாலினை வருகிற சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் அனைவரும் தங்களது வீட்டு மாடியில் பா.ஜ.க. கொடியை பறக்கவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட துணைத்தலைவர் சதாசிவம், மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாவட்ட பொறுப்பாளர் ரவி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட இளைஞர் அணி பொதுச் செயலாளர் திருமால், மகளிர் அணி தலைவி சரண்யா, ஊடக பிரிவு தலைவர் தாஸ்சத்யன், ஊடக பிரிவு துணைத் தலைவர் ஜெகதீஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஸ்ரீரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story