ஹார்விப்பட்டி பூங்காவில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு ஆதரவு தரப்பினரும் திரண்டதால் பரபரப்பு
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டி பூங்காவிற்குள் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும், ஆதரவு தெரிவித்தவர்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம்,
மதுரை மாநகராட்சி எல்லை விரிவாக்க பகுதியான ஹார்விப்பட்டியின் நுழைவுவாயிலில் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவின் உள்ளே நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே தினமும் காலையிலும், மாலையிலுமாக பலர் நடைபயிற்சி செய்து வருகின்றனர். இதே சமயம் பூங்காவிற்குள் செடிகள், கொடிகள், புல் வளர்ந்து வரும் நிலை உருவாகிறது. அதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. இதனால் பூங்காவை பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை நீர்த்தொட்டியை ஹார்விப்பட்டி பூங்காவிற்குள் கட்டுவதற்கு மாநகராட்சி பொறியாளர்கள் முதற்கட்ட ஆயத்த பணியில் ஈடுபட்டனர். இதற்கு ஹார்விப்பட்டி பூங்கா பாதுகாப்பு குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் அவர்கள் ஏற்கனவே 2 மேல்நிலை நீர்த்தொட்டிகள் கட்டப்பட்டுள்ளதால் பொழுது போக்கு பூங்கா சுருங்கி விட்டது. ஆகவே காலியாக உள்ள மாற்று இடத்தை தேர்வு செய்து அதில் மேல்நிலை நீர்த்தொட்டி கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்தநிலையில் பூங்கா வளாகத்தில் உள்ள மாநகராட்சி சுகாதாரம், குடிநீர் வழங்கல் பிரிவு அலுவலகம் முன்பு பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமதாஸ், முன்னாள் துணைத்தலைவர் பாண்டுரெங்கன், முன்னாள் கவுன்சிலர்கள் மரக்கடை முருகேசன், நாகலட்சுமி பாண்டுரெங்கன் ஆகியோர் தலைமையில் பெண்கள் திரண்டு பூங்காவுக்குள் மேல்நிலை தொட்டி கட்ட வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் பூங்கா பாதுகாப்பு குழுவினரும் தொட்டு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூங்காவிற்குள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு போராட்ட குழுவினரை சமரசம் செய்தனர்.
முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமதாஸ் கூறியதாவது, குடிநீர் சரிவர கிடைக்காத நிலையில் ஒரு குடம் ரூ.12 கொடுத்து விலைக்கு வாங்கும் சூழ்நிலை உள்ளது. இந்தநிலையில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் வந்துள்ளது. இந்த திட்டத்தில் பூங்காவுக்குள் மேல்நிலை நீர்த்தொட்டி அமைப்பது பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்றார்.
பூங்கா பாதுகாப்பு குழு பொறுப்பாளர் ராஜூ கூறியதாவது, மக்களுக்கு குடிநீர் வசதி கிடைப்பதை வரவேற்கிறோம். ஆனால் பூங்காவுக்குள் ஏற்கனவே 2 மேல்நிலை நீர்த்தொட்டி உள்ள நிலையில் 3-வதாக கட்ட வேண்டாம். மாற்று இடத்தில் கட்டுமாறு வலியுறுத்துகிறோம் என்றார்.
Related Tags :
Next Story