பேசின்பிரிட்ஜ் போலீஸ் நிலையம் அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை; தம்பியை பழிவாங்க தீர்த்துக்கட்டிய கும்பல்


சிலம்பரசன்
x
சிலம்பரசன்
தினத்தந்தி 29 Dec 2020 2:11 AM IST (Updated: 29 Dec 2020 2:11 AM IST)
t-max-icont-min-icon

பேசின்பிரிட்ஜ் போலீஸ் நிலையம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது தம்பியை பழிவாங்க, இவரை தீர்த்துக்கட்டியது தெரிந்தது.

வாலிபர் வெட்டிக்கொலை
சென்னை புளியந்தோப்பு டிமலஸ் சாலையில் பேசின்பிரிட்ஜ் போலீஸ் நிலையம் அருகில் நேற்று மதியம் வாலிபர் ஒருவரை ஆட்டோவில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி சென்றது.

இது குறித்து தகவல் அறிந்த புளியந்தோப்பு துணை கமி‌‌ஷனர் ராஜே‌‌ஷ்கண்ணா, உதவி கமி‌‌ஷனர் பிரகா‌‌ஷ், இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், வள்ளி, வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலையான வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையானவர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என விசாரணை நடத்தினர்.

ரவுடியின் அண்ணன்
முதல்கட்ட விசாரணையில் கொலையானவர், கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் 4-வது தெருவைச் சேர்ந்த சிலம்பரசன்(வயது 35) என்பதும், கூலி வேலை செய்து வந்ததும் தெரிந்தது. இவருடைய தம்பி அன்பரசன். இவர், அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார்.

அன்பரசனுக்கும், அதே பகுதி 5-வது தெருவைச்சேர்ந்த மற்றொரு ரவுடியான விஜயன் என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில் விஜயன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.

இந்தநிலையில் விஜயனின் முதல் மனைவியின் மகன் பாலசுப்பிரமணியம்(30) என்பவரை அன்பரசன், தனது சகோதரர்கள் இளவரசன், குறளரசன், தென்னரசன் மற்றும் கூட்டாளிகள் மணி, டேவிட், இளவரசனின் மனைவி மல்லிகா ஆகிய 7 பேருடன் சேர்ந்து கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி கொலை செய்தார். இந்த வழக்கில் 7 பேரும் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தம்பியை பழிவாங்க...
பாலசுப்பிரமணியம் கொலைக்கு பழிக்குபழி வாங்க விஜயனின் 2-வது மனைவியின் மகன்களான யுவராஜ் மற்றும் அசோக் ஆகியோர் காத்திருந்தனர்.

இந்தநிலையில் அன்பரசனின் அண்ணன் சிலம்பரசன், புளியந்தோப்பில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு நேற்று வந்து இருந்தார். அதை அறிந்த யுவராஜ், அசோக் ஆகியோர் தங்களது கூட்டாளிகள் 3 பேருடன் ஆட்டோவில் வந்து அன்பரசனை பழிவாங்க அவரது அண்ணன் சிலம்பரசனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கொலையான சிலம்பரசன் மீது போலீஸ் நிலையத்தில் எந்த வழக்கும் இல்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். சிலம்பரசனுக்கு திருமணமாகி பவானி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். பட்டப்பகலில் பேசின் பிரிட்ஜ் போலீஸ் நிலையம் அருகில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story