மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஆட்சியை பற்றி குறை கூறியதால் தரகம்பட்டியில், அ.தி.மு.க.- தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்


மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஆட்சியை பற்றி குறை கூறியதால் தரகம்பட்டியில், அ.தி.மு.க.- தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம்
x
தினத்தந்தி 29 Dec 2020 6:29 AM IST (Updated: 29 Dec 2020 6:29 AM IST)
t-max-icont-min-icon

தரகம்பட்டியில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் ஆட்சியை பற்றி குறை கூறியதால் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சாலை மறியல் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தரகம்பட்டி,

கரூர் மாவட்டம், தரகம்பட்டி கடைவீதியில் நேற்று முன்தினம் இரவு தி.மு.க.சார்பில், மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கடவூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சுதாகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம், என்னென்ன குறைகள் உள்ளன. இந்த பகுதியில் என்ன தேவைகள் உள்ளது எனவும் பேசினர். பின்னர் கூட்டத்தை முடித்து கொண்டு தி.மு.க.வினர் புறப்பட்டனர்.

அப்போது கடைவீதி வழியாக வந்த, தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் காரை அ.தி.மு.க.வினர் வழிமறித்தனர், பின்னர் தி.மு.க. கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியை பற்றி எப்படி குறைகளை கூறி பேசினீர்கள் என்றனர். இதனால் அ.தி.மு.க.வினருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உண்டானது.

சாலை மறியல்

இதனை கண்டித்து தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடமும், வாக்குவாதம் செய்த அ.தி.மு.க.வினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் தரகம்பட்டி கடைவீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story