மணல்மேடு அருகே, ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் விஷம் குடித்து சாவு


மணல்மேடு அருகே, ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை: விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் விஷம் குடித்து சாவு
x
தினத்தந்தி 29 Dec 2020 10:06 AM IST (Updated: 29 Dec 2020 10:06 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே ஓய்வுபெற்ற ஆசிரியை கொலை வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் விஷம் குடித்து இறந்தார். ்போலீசார் துன்புறுத்தியதால் இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் 5 மணி நேரம் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல்மேடு,

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்த நடுத்திட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜானகி(வயது 72). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர் கடந்த 22-ந் தேதி அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையும் மாயமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மணல்மேடு போலீசார், இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த அய்யாவு(45) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

விஷம் குடித்து சாவு

இந்த நிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய அய்யாவு, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அய்யாவு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் துன்புறுத்தியதால்...

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள், பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடுத்திட்டு மெயின்ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்தியதன் காரணமாகவே அய்யாவு மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த அய்யாவுவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் நண்பகல் 12 மணி அளவில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5 மணி நேரம் நடந்தது

மேலும் அந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாத்துரை, சரவணன் ஆகியோர் தலைமையில் 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை தாசில்தார் ஜெனிதாமேரி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து 12 மணிக்கு தொடங்கிய மறியல் போராட்டம் மாலை 5 மணிக்கு கைவிடப்பட்டது.

இந்த போராட்டத்தால் மணல்மேடு, சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story