வருகிற சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட த.மா.கா.விருப்பம் மாநில பொதுச்செயலாளர் பேச்சு


வருகிற சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட த.மா.கா.விருப்பம் மாநில பொதுச்செயலாளர் பேச்சு
x
தினத்தந்தி 29 Dec 2020 11:18 AM IST (Updated: 29 Dec 2020 11:18 AM IST)
t-max-icont-min-icon

வருகிற சட்டமன்றதேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் கூறினார்.

அனுப்பர்பாளையம்,

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. பிறந்தநாள் விழா திருப்பூர் மாநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் திருப்பூரில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.ரவிக்குமார் தலைமை தாங்கினார். விழாவில் காலை 6 மணிக்கு அங்கேரிபாளையம் மாகாளியம்மன் கோவிலிலும், 9 மணிக்கு ரெயில் நிலையம் அருகில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலிலும் ஜி.கே. வாசன் பெயரில் சிறப்பு பூஜை நடத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் கட்சி தலைமை அலுவலகமான காந்திநகரில் உள்ள மூப்பனார் பவனில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் இளைஞர்கள், பெண்கள் உள்பட 150 பேர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி த.மா.கா. வில் இணைந்தனர்.

இதில் த.மா.கா. மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விடியல் சேகர் கலந்து கொண்டு பேசியதாவது:-

20 தொகுதிகளில் போட்டியிட விருப்பம்

த.மா.கா. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. த.மா.கா.வை பொறுத்தவரை தலைவர் ஜி.கே.வாசன் கூட்டணியிடம் உரிய இடங்களை கேட்டு, பெற்றுத் தருவார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிட விருப்பத்தை தெரிவித்துள்ளோம். இந்த தேர்தலையொட்டி தலைவர் ஜி.கே.வாசன் தமிழகத்தை 4 மண்டலங்களாக பிரித்து முதற்கட்டமாக பிரித்து த.மா.கா. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இதன்படி வருகிற 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை 4 நாட்கள் தமிழகம் முழுவதும்சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவர் 3-ந்தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளை ஈரோட்டில் சந்தித்து பேசுகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அரசின் அத்திக்கடவு -அவினாசி திட்டம், மினி கிளினிக் திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் 7, 12 சதவீத உள் ஒதுக்கீடு, பொங்கல் பரிசாக ரூ.2500 உள்பட பல்வேறு மக்கள் நல திட்டங்களை கூறி வாக்கு சேகரிக்க உள்ளோம். தமிழகத்தில் தி.மு.க. குடும்ப அரசியல் கட்சியாக செயல்பட்டு வருகிறது. குடும்பத்தினர் மட்டுமே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ள நிலையில், அந்த கட்சியில் 2-ம் கட்ட தலைவர்கள் இல்லை என்ற நிலையில் தி.மு.க. உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அன்னதானம்

இதையடுத்து செங்கப்பள்ளியில் உள்ள மகிழ்ச்சி கருணை இல்லத்தில் முதியோர் 50 பேருக்கு வேட்டி, சட்டை, சேலையும், மதிய உணவும் வழங்கப்பட்டது. திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு கட்சி கொடியேற்றி, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பின்னர் அங்கு பொதுமக்கள் 4 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், செயலாளர் சேதுபதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் காந்திராஜன், மாவட்ட துணை தலைவர்கள் செழியன், சிவசுப்பிரமணி, ஆசிரியரணி தலைவர் பாலு, மாவட்ட தொழிற்சங்க தலைவர் தனசேகர், இளைஞரணி தலைவர் நடராஜ், மாற்றுத் திறனாளி அணி தலைவர் பாலாஜி, மகளிரணி தலைவி ஷர்மிளா மற்றும் மாவட்ட, மண்டல, டிவிஷன், சார்பு அமைப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story