ஆதம்பாக்கத்தில் பெண் போலீஸ் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு; அதிக வேலைகளை தந்து துன்புறுத்துவதாக புகார்


ஆதம்பாக்கத்தில் பெண் போலீஸ் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு; அதிக வேலைகளை தந்து துன்புறுத்துவதாக புகார்
x
தினத்தந்தி 30 Dec 2020 1:36 AM IST (Updated: 30 Dec 2020 1:36 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிபவர் போலீஸ்காரர் உஷா. இவர் அந்த போலீஸ் நிலையத்தில் கம்ப்யூட்டர் பணியை தற்போது செய்து வருகிறார். இந்தநிலையில், இவர் பேசியதாக நேற்று வெளியான ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த ஆடியோவில் அவர், தான் பணிபுரியும் போலீஸ் நிலையத்தில் தனக்கு அதிகமாக வேலைகளை தந்து துன்புறுத்தப்படுவதாகவும், இவ்வாறு தரப்படும் வேலைப்பளு காரணமாகவே போலீசார் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் புகார் தெரிவித்து இருந்தார்.

மேலும் அதில், அம்மா புற்று நோயாளியாகி இருந்தும். விடுப்பு எடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், பெண் போலீஸ் உஷா இதுபோல் பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போதும் துன்புறுத்துவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது தெரியவந்தது.

இதன் காரணமாகவே அவர், ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு வந்த உஷாவை உயர் அதிகாரிகள் நேற்று விடுப்பு தந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Next Story