திருவாதிரை திருவிழா: நெல்லை சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு


சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வந்தபோது; சிறப்பு அலங்காரத்தில் நடராஜர்
x
சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வந்தபோது; சிறப்பு அலங்காரத்தில் நடராஜர்
தினத்தந்தி 31 Dec 2020 1:24 AM GMT (Updated: 31 Dec 2020 1:24 AM GMT)

திருவாதிரை திருவிழாவையொட்டி நெல்லை சிவன் கோவில்களில் நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது.

ஆருத்ரா தரிசனம்
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி விழா நடத்தப்பட்டது. விழா நாட்களில் தினமும் நெல்லையப்பர், காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மேலும் நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை நடந்தது. 9-ம் நாள் திருநாளான நேற்று முன்தினம் தாமிர சபையில் நடராஜருக்கு திருநீராட்டு அபிஷேகம் நடைபெற்றது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நடராஜரின் ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை நடந்தது. அதிகாலை 3 மணிக்கு பசு தீபாராதனையை தொடர்ந்து நடராஜரின் திருநடன காட்சியான ஆருத்ரா தரிசனம் நடந்தது. நிகழ்ச்சியில் நெல்லை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் பாளையங்கோட்டை சிவன் கோவில், வண்ணார்பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோவில், சந்திப்பு கைலாசபுரம் கைலாசநாதர் கோவில், குறிச்சி சொக்கநாதர் கோவில், டவுன் திருஞானசம்பந்தர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது.

நெல்லை அருகே மேலநத்தம் கிராமத்தில் மேற்கு பார்த்த நிலையில் அமைந்துள்ள கோமதி அம்பாள் சமேத அக்னீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. காலை 10 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடந்தது. மாணிக்கவாசகர் திருவாசகம் முற்றோதுதல் குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் வழிபாடு நடந்தது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது.

செப்பறை அழகிய கூத்தர் கோவில்
நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் நேற்று காலை ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சுவாமி வீதி உலாவும், மாலையில் பஞ்சமுக அர்ச்சனையும் நடைபெற்றது.

சேரன்மாதேவி-அம்பை
சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே அமைந்துள்ள வைத்தியநாத சுவாமி ஒப்பிலா நாயகி அம்பாள் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு மகா அபிஷேகம், கோபூஜை, ஆருத்ரா தரிசனம், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அம்ைப தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள காசிநாத சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கோ பூஜை, தன பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொேரானா தடுப்பு நடவடிக்கையாக சுவாமி அலங்கரிக்கப்பட்டு கோவிலின் உள் பிரகாரத்தில் வலம் வந்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வள்ளியூர்- களக்காடு
இதபோல் வள்ளியூர் அருகே உள்ள சிறுமளஞ்சி சிவகாமி அம்பாள் சமேத சீதமாமுனீஸ்வரர் கோவில், களக்காடு அருகே உள்ள மேலக்கருவேலங்குளம் சவுந்தரபாண்டீஸ்வரர் கோவில், களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் ஆருத்ரா தரிசனம்நடந்தது.

Next Story