மருத்துவ குணம் வாய்ந்த கருப்பு கவுனி நெல் சாகுபடி பஜன்கோவா மாணவர்கள் கள பயிற்சி


மருத்துவ குணம் வாய்ந்த கருப்பு கவுனி நெல் சாகுபடி பஜன்கோவா மாணவர்கள் கள பயிற்சி
x
தினத்தந்தி 31 Dec 2020 7:58 AM IST (Updated: 31 Dec 2020 7:58 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ குணம் வாய்ந்த கருப்பு கவுனி நெல் சாகுபடி செய்வது குறித்து பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் நேரடியாக களப்பயிற்சி பெற்றனர்.

காரைக்கால், 

பழங்கால நெற்பயிர்களில் அதிக மருத்துவகுணம் கொண்டது கருப்பு கவுனி எனும் நெல்வகை. குறிப்பாக, நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, தைராய்டு, மன அழுத்தம், குழந்தையின்மை, எலும்பு தேய்மானம், இடுப்புமூட்டு வலி, இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், புற்றுநோய், கர்ப்பப்பை புற்று உள்ளிட்ட நோய்களுக்கு நல்ல நிவாரணியாக கருப்பு கவுனி அரிசி இருந்தது. நாளடைவில் இந்த நெல் வகையை பலர் மறந்து போனார்கள். சிலர் மட்டுமே அதன் மகத்துவத்தை உணர்ந்து பயிர் செய்து வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் ஒரு சிலர் மட்டுமே இதை பயிர் செய்து வருகின்றனர். அந்தவகையில், காரைக்கால் தலத்தெரு கிராமத்தில், இயற்கை விவசாயி இளங்கோ என்பவர் இந்த கருப்பு கவுனி நெல்லை சாகுபடி செய்து, விற்று வருகிறார்.

இதை அறிந்த, காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 4-ம் ஆண்டு இளங்கலை வேளாண் பட்டப்படிப்பு பயின்று வரும் 28 மாணவர்கள், கல்லூரி இணை பேராசிரியர் ஆனந்தகுமார் தலைமையில், தலத்தெரு சென்று நேரடி கள பயிற்சி பெற்றனர்.

விவசாயி இளங்கோ மாணவர்கள் மத்தியில் பேசுகையில், 160 நாட்கள் வயது கொண்ட இந்த நெல்லை, ஆடிப்பட்டத்தில் பாய் நாற்றங்கால் முறையில் நட்டு, வேப்பம், கடலை புண்ணாக்கு, ஜீவாமிர்த கரைசல், மீன் அமிலம், ஐந்திலைக் கரைசல் பயன்படுத்தி, ஏக்கருக்கு 21 மூட்டைகள் அறுவடை செய்து, கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்து வருகிறேன் என்றார்.

இணை பேராசிரியர் ஆனந்த்குமார், ஒரு சில அரசர்கள் மட்டுமே, இந்த அரிசியை மிரட்டி சாகுபடி செய்யச்சொல்லி பயன்படுத்தி வந்ததாகவும், வேறு யாராவது சாகுபடி செய்தால் தண்டனை வழங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால், இந்த நெல்லை யாரும் அதிகம் சாகுபடி செய்யாமல் போனதாகவும் கூறப்படுகிறது. காலப்போக்கில், இயற்கை விவசாயிகளால், அந்த நெல் மீட்டெடுக்கப்பட்டு தற்போது ஒரு சிலர் சாகுபடி செய்துவருகின்றனர். நாமும் இதை பரிசோதிக்க முன்வர வேண்டும் என்று கூறினார்.

Next Story