தூத்துக்குடியில் அம்மா மினி கிளினிக்; அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து, பெட்டகத்தை வழங்கியபோது
x
தூத்துக்குடியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து, பெட்டகத்தை வழங்கியபோது
தினத்தந்தி 31 Dec 2020 2:32 AM GMT (Updated: 31 Dec 2020 2:32 AM GMT)

தூத்துக்குடியில் 2 அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று மாலை தொடங்கி வைத்தார்.

மினி கிளினிக்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சந்தை ரோடு, கால்டுவெல் காலனி ஆகிய பகுதிகளில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கி.செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மினிகிளினிக்கை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாநகர நல அலுவலர் அருண்குமார், மாநகராட்சி செயற்பொறியாளர் சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர்கள் ராஜபாண்டி, ராஜசேகர், வேளாண் விற்பனைக்குழு உறுப்பினர் திருப்பாற்கடல், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறும் போது, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் மருத்துவ வசதி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து கிராமப்பகுதிகளிலும் அம்மா மருத்துவ முகாம்களை நடத்தினார். அதிக அளவிலான மருத்துவ கல்லூரிகளையும் தொடங்கினார். தமிழகத்தில் சிறந்த மருத்துவ கட்டமைப்பை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து தற்போது ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மருத்துவ வசதிகள் அதிகரித்து உள்ளது. தற்போது அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு சிறு, சிறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இதன் மூலம் கிராம மக்கள் தொலை தூரம் சென்று சிகிச்சை பெறுவது தவிர்க்கப்பட்டு உள்ளூரிலேயே சிகிச்சை பெறும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஆய்வு
முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருவதை முன்னிட்டு அமைச்சர் கடம்பூர் ராஜூ பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது, சின்னப்பன் எம்.எல்.ஏ, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

கயத்தாறு
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம், மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சங்கரவேலு தலைமையில் நடைபெற்றது. மாநில கொள்கை பரப்பு செயலாளர் ராமலிங்கம் வரவேற்று பேசினார். பண்பாட்டுக் கழகத்தின் தென்காசி மாவட்ட தலைவர் நல்லையாசாமி, செயலாளர் ராஜதுரை, தூத்துக்குடி மாவட்ட தலைவர் வலசை கண்ணன், மாவட்ட கவுரவ ஆலோசகர் மாப்பிள்ளைசாமி, விருதுநகர் மாவட்ட தலைவர் குருசாமி, இளைஞரணி செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு, கயத்தாறில் உள்ள அவரது சிலைக்கு இதுவரை எந்த முதல்-அமைச்சரும் வந்து மாலை அணிவிக்கவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வருகிறார். அவருக்கு தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. முதல்-அமைச்சருக்கு ஆயிரம் வாகனங்களில் குடும்பத்தோடு மஞ்சள் கொடி கட்டிய வீரவாள் கொடிகளோடு அணி திரண்டு வரவேற்பு கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடம்பூர்
கடம்பூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். விளாத்திகுளம் எம்.எல்.ஏ.சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, மாவட்ட கவுன்சிலர் ப்ரியாகுருராஜ், மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் மாரியப்பன், மாவட்ட எம.்ஜி.ஆர். மன்ற செயலாளர் பூமாரியப்பன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்கள் நீலகண்டன், ராமமூர்த்தி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 3-ந் தேதி தூத்துக்குடி வருகிறார். மாவட்டத்தில் 2 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் ஈடுபட உள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்தும், தேர்தல் பிரசார பயணத்தை வெற்றிகரமாக நடத்தவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கோவில்பட்டி
முதல்-அமைச்சர் கோவில்பட்டி பகுதி பிரசாரத்தின் போது விவசாயிகள் மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், தொழில்அதிபர்களுடன் முதல்-அமைச்சர் கலந்துரையாட உள்ளார். இதற்காக கோவில்பட்டி பசுவந்தனைரோட்டில் மகாலட்சுமி திருமணமண்டபம் மற்றும் வில்லிசேரி கிராமத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன், மாவட்ட திட்ட இயக்குனர் கணபதி கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் சந்திரசேகர், அ.திமு.க. நகர செயலாளர் விஜய் பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன,் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story