ரே‌‌ஷன் கார்டுகளில் ‘என்.பி.எச்.எச்.' குறியீட்டை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டவர்களால் பரபரப்பு


ரே‌‌ஷன் கார்டுகளில் ‘என்.பி.எச்.எச். குறியீட்டை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 31 Dec 2020 9:22 AM IST (Updated: 31 Dec 2020 9:22 AM IST)
t-max-icont-min-icon

ரே‌‌ஷன் கார்டுகளில் ‘என்.பி.எச்.எச்.’ குறியீட்டை ரத்து செய்யக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் ஏராளமானோர் ரே‌‌ஷன் கார்டுகளில் என்.பி.எச்.எச். (முன்னுரிமையில்லாத கார்டுதாரர்) என்ற குறியீட்டை ரத்து செய்யக்கோரி தனித்தனியாக மனு கொடுக்க நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. எனவே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் அனைவரையும் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுமதிக்க மறுத்தனர். இதையடுத்து அந்தோணிமுத்து உள்பட சிலர் மனுக்களைப் பெற்று கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர்.

இதுதொடர்பாக அந்தோணிமுத்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பட்டினி சாவுகள் ஏற்படும்

மத்திய அரசின் 3 வேளாண்மை திருத்த சட்டங்களால் விவசாய பொருட்களை கொள்முதல் செய்யும் அரசின் கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் மூடப்படும். இதனால் ரே‌‌ஷன் கடைகளும் மூடப்படும். 60 சதவீத ரே‌‌ஷன் கார்டுகளில் என்.பி.எச்.எச். என்ற குறியீடு இருப்பதால் ரே‌‌ஷன் பொருட்கள் கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும். இதனால் பட்டினி சாவுகள் ஏற்படும்.

என்.பி.எச்.எச். கொடுமையை கொரோனா காலத்தில் பொதுமக்கள் அனுபவித்தனர். பி.எச்.எச். (முன்னுரிமையுள்ள கார்டுதாரர்) ரே‌‌ஷன் கார்டுகளுக்கு 65 கிலோ அரிசி கிடைத்தபோது, என்.பி.எச்.எச். ரே‌‌ஷன் கார்டுகளுக்கு 40 கிலோ அரிசிதான் கிடைத்தது. சமீபத்தில் ரே‌‌ஷன் கார்டுகளுக்கு கொண்டைக்கடலை கொடுத்தபோது, என்.பி.எச்.எச். ரே‌‌ஷன் கார்டுகளுக்கு கொண்டைக்கடலை கிடைக்கவில்லை. எனவே என்.பி.எச்.எச். குறியீட்டை ரத்து செய்தால் மட்டுமே கட்டுமான கூலித்தொழிலாளர்களுக்கு உரிய உணவு பொருட்கள் கிடைக்கும். 3 வேளாண்மை திருத்த சட்டங்களால் ரே‌‌ஷன் கடைகளுக்கு மூடுவிழா நடத்துவதின் பின்னணியில் ரே‌‌ஷன் கார்டுகளில் என்.பி.எச்.எச். என்ற குறியீடு வைக்கப்பட்டுள்ளது. எனவே என்.பி.எச்.எச். குறியீட்டை ரத்து செய்து பி.எச்.எச். என பதிவு செய்து அனைத்து உணவுப் பொருட்களும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story