சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அ.தி.மு.க.வினர் கடுமையாக உழைக்க வேண்டும் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு


சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அ.தி.மு.க.வினர் கடுமையாக உழைக்க வேண்டும் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
x
தினத்தந்தி 31 Dec 2020 4:50 AM GMT (Updated: 31 Dec 2020 4:50 AM GMT)

சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அ.தி.மு.க.வினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்று ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அ.தி.மு.க. சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் ஓடியந்தல் பஸ் நிலையம் அருகே நடந்தது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினருமான இரா.குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ப. மோகன், ஒன்றிய செயலாளர்கள் அருணகிரி, அரசு, பழனி, துரைராஜ், சந்தோஷ், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரிஷிவந்தியம் மத்திய ஒன்றிய செயலாளர் கதிர். தண்டபாணி வரவேற்றார். கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், சட்டம் நீதிமன்றங்கள், சிறைத்துறைத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:-

ஒற்றுமையுடன்

கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அயராது பாடுபட்டு தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற பாடுபடவேண்டும். இதுவரை ஜெயலலிதா உதவியுடன் வெற்றி பெற்ற அ.தி.மு.க. தற்போது அவர் இல்லாமல் நடைபெறும் தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இங்குள்ள நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே தேர்தலில் சுலபமாக வெற்றி பெற முடியும்.

தொடர்ந்து 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகள் திறம்பட ஆட்சி புரிந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அ.தி.மு.க. அரசு மீது மக்களுக்கு நல்ல எண்ணமும், அபிப்பிராயமும் ஏற்பட்டுள்ளது. இதை பொதுமக்களிடம் எடுத்து கூறி தேர்தலில் வாக்குகளை பெறவேண்டும். இங்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் பல பொய்களை சொல்லி உங்களை திசைதிருப்ப பார்ப்பார். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் ராஜசேகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்திரசேகரன், தேவ சந்திரன், பாலமுருகன், சின்னராஜ், ராஜேந்திரன், வைத்தியநாதன், எடையூர் பழனி, ராமதாஸ், சத்தியமூர்த்தி, மணிகண்டன், சண்முகம், விஜயவர்மன், குணசேகரன், கதிர் செல்லப்பன் அருணாசலம், லெனின், சுரேஷ், சேகர், கொளஞ்சியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story