கோபி அருகே வேன் கவிழ்ந்து இளம் பெண் பலி; 15 பேர் படுகாயம்


பலியான நித்யா
x
பலியான நித்யா
தினத்தந்தி 31 Dec 2020 5:54 AM GMT (Updated: 31 Dec 2020 5:54 AM GMT)

கோபி அருகே வேன் கவிழ்ந்ததில் இளம் பெண் பலியானார். 15 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

வேன் கவிழ்ந்தது
கோபி அருகே உள்ள மணியகாரன்பாளையத்தை சேர்ந்த நித்யா (வயது 22) மற்றும் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜன், செல்வன், தங்கமணி, சித்ரா, வடிவு, பூங்கொடி உள்பட சிலர் கூலிேவலைக்காக வேனில் வெளியூர் சென்றுகொண்டு இருந்தார்கள். வேனை கிருஷ்ணகோபாலன் என்பவர் ஓட்டினார்.

காவேரிபாளையம் என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் வேகமாக ஓடி ரோட்டு ஓரம் இருந்த கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தது. இதில் வேன் கவிழ்ந்தது.

பெண் பலி
இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி வேனில் பயணம் செய்த 16 பேர் படுகாயம் அடைந்தார்கள். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார்கள்.

இதில் செல்லும் வழியிலேயே நித்யா இறந்துவிட்டார். படுகாயம் அடைந்த 15 பேர் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்கள். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

இந்த விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் கிருஷ்ணகோபாலிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story