திருப்பத்தூர் அருகே, தாறுமாறாக ஓடிய கார் மோதி 5 பேர் படுகாயம்


திருப்பத்தூர் அருகே, தாறுமாறாக ஓடிய கார் மோதி 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 31 Dec 2020 12:01 PM GMT (Updated: 31 Dec 2020 12:01 PM GMT)

திருப்பத்தூர் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோதி 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருப்பத்தூர்,

ஆம்பூர் தேவலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர், இவரின் மகன் ஸ்ரீநித் (வயது 25), கோவில் பூசாரி. இவர், சொந்தமாக கார் வைத்துள்ளார். இவர், தனது காருக்கு உதிரிப்பாகங்கள் வாங்க வேண்டும் என ஆண்டியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (24) என்பவரிடம் போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.

சுதாகர் தனக்கு தெரிந்த கடை அருரில் உள்ளது, போய் வாங்கி வரலாம், எனத் தெரிவித்துள்ளார். ஸ்ரீநித், நண்பரான சின்னவரிகத்தை சேர்ந்த சதீஷ் (25) மற்றும் சுதாகர் ஆகியோர் அருர் சென்று காருக்கு உதிரிப்பாகங்களை வாங்கி வந்து மீண்டும் திருப்பத்தூருக்கு செல்லும்போது, காரை சுதாகர் ஓட்டுவதாக கூறினார்.

மெயின் ரோட்டில் காரை ஓட்ட தெரியாமல் ஓட்டி மிட்டூர் பஸ் நிலையம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஆண்டியப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பூபதி (42) என்பவரின் மோட்டார் சைக்கிளின் பின்பக்கம் மீது கார் மோதியது.

அதில் மோட்டார்சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த தனுஷ் (13) பலத்த காயம் அடைந்தார். பூபதியின் வலது கால் உடைந்தது. அந்த வழியாக வந்த லாலாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (35) என்பவரின் மோட்டார்சைக்கிள் மீதும் கார் மோதியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார்.

சதீஷ் காரை நிறுத்தாமல் வேகமாக சென்று மிட்டூர் காந்தி நகர் அருகே பலப்பலநத்தம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (33), ஆண்டல்வாடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (49) ஆகியோர் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். அப்பகுதி மக்கள் காரை நிறுத்தி, காருக்குள் இருந்த 3 பேரை வெளியே இழுத்து போட்டு தாக்கினர். கார் கண்ணாடியை உடைத்தனர்.

குரிசிலாப்பட்டு போலீசார் விரைந்து வந்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் மோதி 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story