மதுரையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் - 3 எம்.பி.க்கள் பங்கேற்பு


மதுரையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் - 3 எம்.பி.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 31 Dec 2020 6:05 PM GMT (Updated: 31 Dec 2020 6:05 PM GMT)

மதுரையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 3 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

மதுரை,

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அந்தந்த மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தி அதனை, தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்கின்றனர். அந்த வகையில் தேர்தல் தயாரிப்புக்குழுவினர் நேற்று மதுரை வந்தனர்.

இதனை தொடர்ந்து மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஓட்டலில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு ஆலோசனை கூட்டம் குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் நடந்தது. உறுப்பினர்கள் திருச்சி சிவா எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர். மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் பொன்.முத்துராமலிங்கம் (வடக்கு) , கோ.தளபதி(தெற்கு), மாவட்டச்செயலாளர்கள் பி.மூர்த்தி எம்.எல்.ஏ. (வடக்கு), மணிமாறன் (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மடீட்சியா, தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், காய்கறி பூ வியாபாரிகள் சங்கம் மற்றும் வர்த்தக பிரமுகர்கள், ஆசிரியர் சங்கத்தினர், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர் முன்னேற்றக்கழகத்தினர் உள்ளிட்டோர் வந்து மனு அளித்தனர். அவர்களிடம் மாவட்டத்தில் 10 தொகுதிகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து குழுவினர் கேட்டறிந்தனர்.

இதுபோல், அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை மூடப்பட்டு, செயல்படாமல் கிடக்கிறது. அதனை செயல்படுத்தி, மீண்டும் திறந்து, வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. மேலும், டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருவோரை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என மனு அளித்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த கூட்டம் நடைபெற்றது.

Next Story