புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை; மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை


புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை; மாமல்லபுரத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 1 Jan 2021 6:05 AM IST (Updated: 1 Jan 2021 6:05 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை நுழைவு வாயிலில் மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

வெறிச்சோடி காணப்பட்டன
தற்போது உருமாறிய புதிய கொரோனா வைரஸ் உருவாகி பரவிவருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், ரிசார்டடு்கள், பண்ணை வீடுகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு ஓடடல்களில் மது விருந்துடன் ஆடல், பாடல் நடைபெறும் நிகழ்ச்சி அரங்க கூடம் மற்றும் மதுபான பார்கள் களையிழந்து காணப்பட்டது.

அதேபோல் இந்த ஆண்டு நீச்சல் குளங்கள் செயல்படுவதற்கும் அனுமதி கிடையாது என்பதால் அனைத்து ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளங்களும் சீல் வைக்கப்பட்டன. கூட்டமாக வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டதால் எந்தவித ஆரவாரமின்றி ஓட்டல்கள், பண்ணை விடுகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தீவிர வாகன சோதனை
குறிப்பாக அறைகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளவர்களின் வாகனங்கள் மட்டுமே மாமல்லபுரம் நகருக்குள் செல்ல கிழக்கு கடற்கரை சாலையில் அனுமதிக்கப்பட்டன. நேற்று காலை 10 மணி முதல் மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி மற்றும் போலீசார் கிழக்கு கடற்கரை சாலை நுழைவு வாயிலில் தீவிர வாகன சோதனை செய்து அடையாள அட்டை, அறைகள் முன்பதிவு செய்யப்பட்ட ரசீது போன்றவற்றை காண்பித்த பின்னரே கார், சுற்றுலா வேன் உள்ளிட்ட வாகனங்களை நகருக்குள் செல்ல அனுமதித்தனர். குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் இரு சக்கர வாகனங்களில் புத்தாண்டு கொண்டாட வருபவர்கள் முட்டுக்காடு சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆன்லைன் மூலம் நுழைவு டிக்கெட்
இரு சக்கர வாகனங்களில் காதல் ஜோடிகள் பலரும் புத்தாண்டு கொண்டாட வந்து போலீஸ் சோதனை சாவடியில் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அதேபோல் ஆன்லைன் மூலம் நுழைவு டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே புராதன சின்னங்களை கண்டு களிக்க இன்று (வெள்ளிக்கிழமை) அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

Next Story