கோவில்பட்டி அருகே மின்சாரம் தாக்கி பள்ளிக்கூட நிர்வாகி பலி; அறுந்துகிடந்த மின்ஒயரை ஓரமாக போட முயன்றபோது பரிதாபம்


முத்துக்கனி
x
முத்துக்கனி
தினத்தந்தி 1 Jan 2021 8:21 AM IST (Updated: 1 Jan 2021 8:21 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே தெருவில் அறுந்து கிடந்த மின்ஒயரை ஓரமாக போட முயன்றபோது, மின்சாரம் தாக்கி பள்ளிக்கூட நிர்வாகி பரிதாபமாக பலியானார்.

பள்ளிக்கூட நிர்வாகி
கோவில்பட்டியை அடுத்துள்ள தெற்கு திட்டங்குளம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முத்துக்கனி(வயது 67). இவர் இங்குள்ள ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளிக்கூட நிர்வாகியாக உள்ளார். நேற்று காலை 6மணி அளவில் வீட்டிற்கு அருகே தெருவில் மின்ஒயர் அறுந்து கிடந்தது.

மின்சாரம் தாக்கி சாவு
இதை அறிந்த அவர், யாரும் மிதித்து விடக் கூடாது என்பதற்காக அறுந்துகிடந்த மின்ஒயரை ஓரமாக எடுத்துபோடும்போது முத்துக்கனி மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்். தகவல் அறிந்தவுடன் கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துகனிக்கு, தேவபுஷ்பம் (63) என்ற மனைவியும், சத்தியா (30) என்ற மகளும், தெய்வேந்திரன் (28) என்ற மகனும் உள்ளனர். மின்சாரம் தாக்கி பள்ளிக்கூடநிர்வாகி பலியான சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story