ஊட்டி பெண் சாவில் திருப்பம்: கணவர் தாக்கியதால் விஷம் குடித்து தற்கொலை செய்தது அம்பலம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


ஜமுனா
x
ஜமுனா
தினத்தந்தி 1 Jan 2021 9:04 AM IST (Updated: 1 Jan 2021 9:04 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி பெண் சாவில் திடீர் திருப்பமாக கணவர் தாக்கியதால் விஷம் குடித்து தற்கொலை செய்தது அம்பலமானது. இதனால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் சாவு
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கோடப்பமந்து பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜமுனா (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 27-ந் தேதி கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஜமுனாவை பிரதீப் தாக்கியதாக தெரிகிறது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட ஜமுனா மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தற்கொலை செய்தது அம்பலம்
இது தொடர்பாக ஊட்டி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் குடும்பத்தகராறு காரணமாக ஜமுனாவை, பிரதீப் தாக்கியதால், மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஜமுனாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர்கள், உடலை வாங்க மறுத்ததுடன், ஜமுனாவை பிரதீப் அடித்து கொலை செய்துவிட்டார். எனவே அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை
இதையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, ஜமுனாவின் உடலை வாங்கிச்சென்றனர்.

இதற்கிடையே, மனைவி விஷம் குடித்ததை அறிந்த பிரதீப்பும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். அவருக்கு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story