பொள்ளாச்சியை அடுத்த நல்லிகவுண்டன்பாளையம், ராசக்காபாளையத்தில் மினி கிளினிக் திறப்பு விழா; அமைச்சர், துணை சபாநாயகர் தொடங்கி வைத்தனர்
நல்லிகவுண்டன்பாளையம், ராசக்காபாளையத்தில் மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. இதை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மினி கிளினிக் திறப்பு
பொள்ளாச்சியை அடுத்த நல்லிகவுண்டன்பாளையம், ராசக்காபாளையத் தில் மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன் முன்னிலை வகித்தார். மினி கிளினிக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வை யிட்டனர். அதைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் முன்னாள் அமைச்சர் தாமோதரன், கஸ்தூரிவாசு எம்.எல்.ஏ., கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், மாநில கோ-ஆப்டெக்ஸ் தலைவர் வெங்கடாச்சலம், அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், தாசில்தார் தணிகவேல், வடக்கு ஒன்றிய குழு தலைவர் விஜயராணி ரங்கசாமி, துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கோவை தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ரகுபதி, மாணவர் அணி மாவட்ட செயலாளர் ஜேம்ஸ்ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரங்கநாதன், பொன்னுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது கூறியதாவது:-
ஆனைமலையாறு, நல்லாறு திட்டம்
தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு செயல் படுத்தப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.வினர் தேர்தலுக்கு மட்டும் மக்களை சந்திப்பவர்கள் அல்ல. தொடர்ந்து மக்களை நேரடியாக சந்தித்து வருகிறோம். ஆனால் தி.மு.க.வினர் கிராம சபை கூட்டம் நடத்தி தேர்தலுக்காக மக்களை சந்திக்கின்றனர். தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் நல்லதை செய்தாரா?. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூறிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடிந்ததா?. 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை மக்களை சந்திக்க வில்லை. தி.மு.க., காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டு உள்ளனர். பொங்கல் பரிசை கோர்ட்டு மூலம் தி.மு.க.வினர் நிறுத்த பார்க்கின்றனர். மு.க.ஸ்டாலின் தடுத்தாலும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும். கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ஆனைமலையாறு, நல்லாறு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
தோல்வி பயத்திலும், மீண்டும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி வருவதை தடுக்க முடியாமல் போய்விடுமோ என்ற பயத்திலும் மு.க.ஸ்டாலின் என்ன பேசுவது என தெரியாமல் பேசுகிறார். எத்தனை பேர் வந்தாலும், அ.தி.மு.க.வை உடைக்க முடியாது. தி.மு.க. ஆட்சி காலத்தில் கலர் டி.வி. கொடுக்கும்போது உதயசூரியன் சின்னம், அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி படம் போட்டு கொடுத்தனர். தற்போது புதிதாக அவதாரம் எடுத்தது போன்று பேசுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
எண்ணற்ற திட்டங்கள்
இதில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:-
மினி கிளினிக் மூலம் கிராமமக்கள் சிகிச்சை பெறலாம். இந்த திட்டத்திற் கான பெருமை எல்லாம் முதல்- அமைச்சரையே சேரும். விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சர் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். கோவை மாவட்டத்தில் 50 ஆண்டு காலத்தில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்து உள்ளார். நான்கு வழிச்சாலை அமைக்கவும் அமைச்சர் உதவி செய்து உள்ளார். பொள்ளாச்சி தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
அரசு ஆஸ்பத்திரியில் ரூ.34 கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் பணிகள் முடிக்கப்பட்டு முதல்- அமைச்சரால் திறக்கப்பட உள்ளது. தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்ய ரூ.75 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தொடர நல்லதொரு தீர்க்கமான முடிவை மக்கள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story