தமிழகத்தில் அடுத்த ஆண்டு புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள்: 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் கூடுதலாக 130 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு


தமிழகத்தில் அடுத்த ஆண்டு புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள்: 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் கூடுதலாக 130 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 1 Jan 2021 9:28 AM IST (Updated: 1 Jan 2021 9:28 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த ஆண்டு புதிதாக 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதால், அடுத்த ஆண்டு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் கூடுதலாக 130 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதிக்குட்பட்ட மணப்பாறை-துவரங்குறிச்சி சாலை சந்திப்பில் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அங்கு ஊராளி கவுண்டர் சங்க கூட்டமைப்பினரோடு அவர் கலந்துரையாடினார். அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து காவல்காரப்பட்டியில் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். முன்னதாக அவருக்கு, பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

மகளிர் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ரூ.12 ஆயிரம் கோடி

மகளிர் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார். திருச்சி மாவட்டத்தில் 9,300-க்கும் மேற்பட்ட மகளிர் குழு செயல்பட்டு வருகிறது. மணப்பாறையில் மட்டும் சுமார் 2 ஆயிரம் குழுக்கள் செயல்படுகிறது. மகளிருக்கு வங்கியில் அதிக அளவில் கடன் உதவி வழங்க வேண்டும் என்பதற்காக வங்கி இணைப்பு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில்கூட மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.12 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எந்த பொதுக்கூட்டத்திற்கு சென்றாலும், அங்கு மகளிர் குழுவினரின் பொருட்காட்சியை பார்த்து விட்டுத்தான் செல்வார். அந்த அளவுக்கு அவர்கள் மீது நல்ல எண்ணம் கொண்டிருந்தார். அவரது வழியில்தான் இந்த ஆட்சியை நடத்தி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம்.

11 புதிய மருத்துவ கல்லூரிகள்

மணப்பாறை தொகுதி விவசாயிகள், ஏழை தொழிலாளர்கள் அதிகம் உள்ள இடமாகும். அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள்தான் அதிகமாக இருப்பார்கள். இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 41 சதவீத மாணவ-மாணவிகள் அரசு பள்ளியில்தான் படிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அரசுப்பள்ளியில் படித்து நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமலும், மற்ற மாணவர்களுடன் போட்டியிட்டு அதிக மதிப்பெண் பெற முடியாத சூழலில் உள்ளனர். அதனால், அவர்களுக்கு மருத்துவ இடம் கிடைப்பது அரிதானது.

அதை உணர்ந்துதான், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி பயிலும் வகையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை சட்டமாக கொண்டு நிறைவேற்றி உள்ளோம். கடந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த 6 பேருக்குத்தான் மருத்துவ கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்திய காரணத்தால் நடப்பாண்டில் 313 ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைத்துள்ளது. 92 பேருக்கு பல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு புதிதாக 11 மருத்துவ கல்லூரிகளை நாங்கள் தொடங்க இருக்கிறோம். அதில் 1, 650 மருத்துவர்கள் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது. அக்கல்லூரிகளில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின்படி சுமார் 130 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆக நடப்பாண்டு 313, அடுத்த ஆண்டு 130 என ஏழை, எளிய மாணவர்கள் மொத்தம் 443 பேருக்கு மருத்துவ வாய்ப்பு கிடைக்க உள்ளது. 350 ஏழை, எளிய குடும்பத்தில் சேர்ந்தவர்கள் பல் மருத்துவம் படிப்பார்கள். அவர்களின் கல்வி செலவு முழுவதையும் அரசே ஏற்றுக்கொள்கிறது.

லட்சியம் என்ன?

கிராமம் வளர்ச்சி அடைய வேண்டும். ஏழை மக்களும் டாக்டராக வேண்டும். அதுதான் எங்கள் லட்சியம். அதை நாங்கள் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம். கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு எம்.பி.பி.எஸ். டாக்டர், ஒரு நர்ஸ் மற்றும் ஒரு மருத்துவ உதவியாளர் இருப்பர். தமிழ்நாட்டில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டு செயலாற்றி வருகிறோம்.

மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் மட்டும் 12 இடங்களில் ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் அம்மா மினி கிளினிக் செயல்பட உள்ளது. கிராமத்தில் இருந்து நகரம் வரை ஏழை மக்கள் வசிக்கும் பகுதியில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

நிலம் அபகரிப்பு

2006-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் கொடுப்பதாக சொன்னார்கள். அதை செய்தார்களா?. இல்லை. நிலம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. மாறாக, நிலத்தை அபகரிக்கத்தான் செய்தார்கள். அதனால், மக்கள் நிம்மதி இழந்தனர். எங்காவது விலைமதிக்க முடியாத நிலமாக இருந்தால் தி.மு.க.வினர் பட்டா போட்டு விடுவார்கள். அப்படி ஏமாற்றி பெறப்பட்ட நிலத்தை திரும்ப வாங்கும் வகையில் நில அபகரிப்பு சிறப்பு தடுப்பு பிரிவு ஒன்றை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா.

எனவே, தமிழகத்தில் மீண்டும் அராஜக ஆட்சி வரவேண்டுமா?. தமிழகத்தில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கிற ஆட்சி அ.தி.மு.க. தான். எனவே, அராஜகத்திற்கு வழிவிடாமல் ஒரு அமைதியான செழுமையான ஆட்சி மீண்டும் தொடர வாக்களிப்பீர் இரட்டை இலை சின்னத்திற்கு என்று உங்களையெல்லாம் கேட் டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப.குமார் முன்னிலை வகித்தார். முடிவில் மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ. சந்திரசேகரன் நன்றி கூறினார்.

மணப்பாறை

முன்னதாக மணப்பாறை பஸ் நிலையம் அருகே திறந்த வேனில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கடந்த 2021-ல் நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் இரட்டை இலைக்கு வாக்குகள் கேட்டு உங்கள் முன் நிற்கிறேன். மீண்டும் ஜெயலலிதாவின் அரசு 2021-ல் தொடர நீங்கள் முழு ஆதரவை அ.தி.மு.க.வுக்கு அளிக்க வேண்டும்.

தி.மு.க. ஒரு அராஜக கட்சி. ஆட்சியில் இல்லாத போதே எவ்வளவு ரவுடிசம் செய்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு ஓட்டலில் சென்று மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு பில் கேட்டால் அடிக்கிறார்கள். இதை கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு ஒரு தலைவர் மறுநாள் செல்கிறார்.

இப்படி ஆட்சியில் இல்லாத போதே இவ்வளவு ரவுடிசம் செய்பவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் நிம்மதியாக வாழ முடியுமா?. (இவ்வாறு கேள்வி எழுப்பியபோது, அங்கு திரண்டிருந்த மக்கள் முடியாது...முடியாது... என்று சத்தமாக கூறினார்கள்.)

விருது

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பேணிக்காத்ததற்காக இந்தியா டுடே விருது தமிழக அரசுக்கு கிடைத்திருக்கிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக இந்த அரசு செயல்படுகிறது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஏரி, குளங்கள் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்துரையாடல்

சோமரசம்பேட்டை பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

பெண்கள் வாழ்வில் அனைத்தும் பெற்று முன்னேற வேண்டும் என அரும்பாடுபட்டவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவர் கொண்டு வந்த அத்தனை திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

கிராமப்புற மாணவர்கள் மற்றும் பெண்களின் தரமான கல்விக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். பெண்களுக்கு அதிக பாதுகாப்புகளை வழங்கும் அரசாகவும் அ.தி.மு.க. அரசு திகழ்கிறது. ஆகவே ஜெயலலிதாவின் இந்த அரசு தொடர நீங்கள் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பங்கேற்றவர்கள்

மணப்பாறையில் நடந்த நிகழ்ச்சியில் மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.வெங்கடாசலம், வையம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் குமாரவாடி என்.சேது, வையம்பட்டி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கல்பனா சேது, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் புத்தாநத்தம் முகம்மது இஸ்மாயில், ஜோதிடன் பி.சின்னகண்ணு, மணியங்குறிச்சி ஊராட்சி தலைவர் அம்மாகண்ணு சின்னு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மயில்வாகணன், திருச்சி தெற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வக்கீல் டி.எம்.முருகன், மருங்காபுரி தெற்கு ஒன்றிய செயலாளர் கண்ணூத்து பொன்னுசாமி, பொன்னம்பட்டி பேரூர் செயலாளர் திருமலைசாமிநாதன், மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, வையம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மணப்பாறை ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் நேதாஜி, மாவட்ட துணை செயலாளர் எண்டபுளி ராஜ்மோகன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் சண்முகபிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story