அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் தமிழ் வளர்ச்சி இயக்குனர் பேச்சு


அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் தமிழ் வளர்ச்சி இயக்குனர் பேச்சு
x
தினத்தந்தி 1 Jan 2021 9:38 AM IST (Updated: 1 Jan 2021 9:38 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என திருவாரூரில் தமிழ் வளர்ச்சி இயக்குனர் விஜயராகவன் கூறினார்.

திருவாரூர்,

தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்ட 1956-ம் ஆண்டு டிசம்பர் 27-ந் தேதியை நினைவு கூரும் வகையில் ஆட்சிமொழி சட்ட வாரம் ஆண்டுதோறும் டிசம்பர் திங்களில் ஒரு வாரகாலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் ஆட்சி மொழி சட்ட வாரம் கடந்த 23-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ஒருவார காலம் நடைபெற்றது.

இதன் நிறைவு விழா திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.

விழாவிற்கு தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் விஜயராகவன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நிறைய கடைகளில் தமிழ் பெயர் என்பது இல்லாமல் உள்ளது. எனவே அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு தமிழ் பெயரில் வைக்கின்ற பழக்கத்தை பெற்றோர்கள் உருவாக்கி கொள்ள வேண்டும்.

தாய்மொழி உயிர்

ஒரு பண்பாடு என்பது மொழியில் தான் உள்ளது. நமது தாய் மொழியை என்றும் மறக்க கூடாது. ஆங்கிலம் என்பது பேசுவது அறிவு சார்ந்தது. தாய் மொழியான தமிழ் மொழி என்பது நமது உயிர் என்பதை உணர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், ராதாகிருஷ்ணன், புலவர் சண்முகவடிவேல், எண்கண்மணி, இளந்தமிழ் இலக்கியப்பட்டறை மாணவர் தமிழ்பாரதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் சித்ரா வரவேற்றார். முடிவில் புலவர் கோமல் தமிழமுதன் நன்றி கூறினார்.

Next Story