புத்தாண்டிற்காக கட்டாய பணம் வசூல்: தஞ்சை சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


புத்தாண்டிற்காக கட்டாய பணம் வசூல்: தஞ்சை சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 1 Jan 2021 10:19 AM IST (Updated: 1 Jan 2021 10:21 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டிற்காக கட்டாய பணம் வசூல் செய்வதாக வந்த புகாரின் பேரில் தஞ்சை சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.1¼ லட்சம், 4 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

புத்தாண்டையொட்டி அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் உயர் அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அதன்படி 2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு டாக்டர்கள் ஏராளமானோர் நேற்று நேரில் வந்து துணை இயக்குனர் ரவீந்திரனை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

அப்படி வாழ்த்து தெரிவிக்கும்போது பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக மாவட்ட ஆய்வுக்குழுக்கு தகவல் கிடைத்தது. அங்கிருந்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

இதையடுத்து மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கஜேந்திரன், லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், பத்மாவதி, சசிகலா, ஏட்டுகள் அய்யப்பன், மணிகண்டன், சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று இரவு 7.30 மணிக்கு சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

பின்னர் அலுவலக நுழைவு வாயிலை பூட்டிவிட்டு துணை இயக்குனர் அறையில் சோதனையில் ஈடுபட்டனர்.

ரூ.1¼ லட்சம்-4 கிராம் தங்கம் பறிமுதல்

அப்போது துணை இயக்குனரின் மேஜையினுள் அதிக அளவில் பணம் இருந்தது. மேலும் மேஜையின் மீது பரிசு பொருட்களும், தங்க காசுகளும் இருந்தன. இவைகள் எல்லாம் புத்தாண்டையொட்டி கட்டாய வசூல் செய்தது என தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தையும், பரிசு பொருட்கள் மற்றும் தங்க காசு ஆகியவற்றையும் கைப்பற்றினர்.

மேலும் நிர்வாக அலுவலர் வெங்கடசுப்பிரமணியனின் மேஜையினுள் இருந்தும் பணம் கைப்பற்றப்பட்டது. மொத்தம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500, 4 கிராம் தங்க காசு, வெள்ளி விளக்கு, 42 சால்வைகள், 15 கிலோ பழங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவைகள் அனைத்தும் கும்பகோணம் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது.

2 பேர் மீது வழக்குப்பதிவு

இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் கூறும்போது, வட்டார மருத்துவ அலுவலர்கள் 62 பேரிடம் கட்டாயமாக பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் சோதனை நடத்தியதில் துணை இயக்குனர் ரவீந்திரன் மேஜையில் இருந்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரமும், நிர்வாக அலுவலர் வெங்கட சுப்பிரமணியன் மேஜையில் இருந்து ரூ.7,500-ம் கைப்பற்றப்பட்டது. மேலும் தங்ககாசு, வெள்ளி விளக்கு ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவைகள் அனைத்தும் கும்பகோணம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஒப்படைக்கப்படும். இது தொடர்பாக துணை இயக்குனர் ரவீந்திரன், நிர்வாக அலுவலர் வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். இந்த சோதனை இரவு 11 மணி வரை நடைபெற்றது.

சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு பணம்-தங்கம் ஆகியவை பறிமுதல் செய்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story