தேனியில் வாகன விற்பனை நிறுவனத்தில் ரூ.63½ லட்சம் மோசடி செய்த உதவி மேலாளர் கைது
வாகன விற்பனை நிறுவனத்தில் ரூ.63½ லட்சம் மோசடி செய்த உதவி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.63½ லட்சம் மோசடி
தேனி நகர் பெரியகுளம் சாலையில் ராமமூர்த்தி என்பவர் தனியார் இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய நிறுவனத்தில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே காராம்பட்டியை சேர்ந்த தங்கராசு (வயது 35) உதவி மேலாளராகவும், தேனி அருகே மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்த ராமர் மனைவி அருணாதேவி (32) ஊழியராகவும் வேலை பார்த்து வந்தனர்.
அவர்கள் இருவரும் சேர்ந்து, வாடிக்கையாளர்களிடம் இருந்து வாகனங்களுக்கான நிதி நிறுவன கடனுக்கான தவணை தொகையை வசூல் செய்து நிதி நிறுவன வங்கி கணக்கில் செலுத்தாமலும், தவணை செலுத்தாததால் பறிமுதல் செய்த வாகனங்களை நிறுவனத்திற்கு தெரியாமல் மறுவிற்பனை செய்தம் இருக்கின்றனர். இதில் அவர்கள் ரூ.63½ லட்சம் மோசடி செய்துள்ளனர்.
விற்பனை மேலாளர் கைது
இதுகுறித்து ராமமூர்த்தி அளித்த புகாரின் பேரில், தங்கராசு, அருணாதேவி ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் தேடி வந்தனர். அருணாதேவியை ஒரு மாதத்துக்கு முன்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக இருந்த தங்கராசுவை தொடர்ந்து தேடி வந்த நிலையில், அவர் உசிலம்பட்டியில் வேறு ஒரு முகவரியில் வசிப்பது தெரியவந்தது. அங்கு குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று, தங்கராசுவை நேற்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story