ஆங்கில புத்தாண்டையொட்டி கடலூரில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை ரூ.1,400-க்கு விற்பனை


ஆங்கில புத்தாண்டையொட்டி கடலூரில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை ரூ.1,400-க்கு விற்பனை
x
தினத்தந்தி 1 Jan 2021 11:38 AM IST (Updated: 1 Jan 2021 11:38 AM IST)
t-max-icont-min-icon

ஆங்கில புத்தாண்டையொட்டி கடலூரில் நேற்று பூக்கள் விலை கிடுகிடு வென உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடலூர்,

கடலூர் பஸ் நிலையம் அருகில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் பூக்கும் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் பூக்கள் கொள்முதல் செய்யப்பட்டு, இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

இங்கு பண்டிகை காலம், திருமண முகூர்த்த நாட்கள் மற்றும் முக்கிய நாட்களில் பூக்களின் விற்பனை அதிகமாக இருக்கும்.

ஆங்கில புத்தாண்டு

பூக்கள் வரத்துக்கு ஏற்ப விலை உயர்ந்தும், குறைத்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முகூர்த்த நாள் இல்லாததால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.600 வரையும், மற்ற பூக்கள் விலை குறைந்தும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டையொட்டி கடலூர் மார்க்கெட்டில் நேற்று பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது.

விலை நிலவரம்

அதாவது கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.600-க்கு விற்ற மல்லிகை பூ நேற்று கிலோவுக்கு ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ரூ.500-க்கு விற்ற கனகாம்பரம் கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், ரூ.200-க்கு விற்ற காக்கட்டான் கிலோ ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் ரூ.40-க்கு விற்ற கோழிக்கொண்டை கிலோ ரூ.80-க்கும், ரூ.100-க்கு விற்ற சம்பங்கி கிலோ ரூ.180-க்கும், ரூ.100-க்கு விற்ற ரோஜா ரூ.240-க்கும், ரூ.80-க்கு விற்ற பட்டன் ரோஸ் கிலோ ரூ.160--க்கும், ரூ.100-க்கு விற்ற சாமந்தி கிலோ ரூ.200-க்கும், ரூ.40-க்கு விற்ற கேந்தி கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும், மார்க்கெட்டில் நேற்று மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. எப்போதும் கால் கிலோ மற்றும் அரை கிலோ என வாங்கும் பொதுமக்கள் நேற்று விலை உயர்வால் குறைந்தளவே பூக்கள் வாங்கி சென்றதை காண முடிந்தது.

காரணம் என்ன?

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் நாணமேடு, உச்சிமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மார்க்கெட்டுக்கு மல்லிகை பூவை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தற்போது ஆங்கில புத்தாண்டு மற்றும் வரத்து குறைவால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் சீசன் இல்லாததால் மார்க்கெட்டிற்கு குண்டுமல்லி பூக்களின் வரத்து இல்லை என்றனர்.

Next Story