அணைகளில் கூடுதலாக தண்ணீர் திறப்பு: நெல்லை தாமிரபரணி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு; குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்


நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை தண்ணீர் சூழ்ந்ததை படத்தில் காணலாம்
x
நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை தண்ணீர் சூழ்ந்ததை படத்தில் காணலாம்
தினத்தந்தி 2 Jan 2021 12:35 AM GMT (Updated: 2 Jan 2021 12:35 AM GMT)

அணைகளில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால், நெல்லை தாமிரபரணி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.

பலத்த மழை
வடகிழக்கு பருவமழை நிறைவடையும் தருவாயில், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் இரவில் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய மழை பெய்தது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகள் மற்றும் அம்பையில் பலத்த மழை கொட்டியது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.



குற்றாலம் மெயின் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்ததை படத்தில் காணலாம்.


பாபநாசம் அணைக்கு நேற்று அதிகாலையில் வினாடிக்கு 5,263 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீ்ர் திறந்து விடப்பட்டது. பின்னர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. காலையில் வினாடிக்கு 2,405 கன அடி தண்ணீரும், மாலையில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது.

வெள்ளப்பெருக்கு
மேலும் கடனாநதி அணையில் இருந்து வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்தது. இதனால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் புத்தாண்டை முன்னிட்டு, கோவிலுக்கு வந்த பக்தர்களை உடனே பாதுகாப்பாக வெளியேற்றினர். மேலும் கோவிலில் இருந்த பொருட்கள், சிலைகள் குறுக்குத்துறை மேல கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாபநாசம்-95, சேர்வலாறு-97, மணிமுத்தாறு-67, நம்பியாறு-3, கொடுமுடியாறு-20, அம்பை-77, சேரன்மாதேவி-22, நாங்குநேரி-25, பாளையங்கோட்டை-10, ராதாபுரம்-19, நெல்லை-11.

கடனா-30, ராமநதி-8, கருப்பாநதி-17, குண்டாறு-13, அடவிநயினார்-5, ஆய்க்குடி-31, சங்கரன்கோவில்-29, செங்கோட்டை-7, தென்காசி-25, சிவகிரி-28.

குற்றாலம் அருவி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

இதனால் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். பின்னர் அவர்கள் ஐந்தருவி மற்றும் புலியருவியில் குளித்து சென்றனர்.

குளிக்க அனுமதி
இந்த நிலையில் நேற்று காலை மலைப்பகுதியில் மழை குறைந்ததை தொடர்ந்து குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதைத்தொடர்ந்து காலை 10 மணி முதல் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோன்று பழைய குற்றாலம் அருவியிலும் காலையில் இருந்தே குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று புத்தாண்டு தினம் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்து சென்றனர்.

Next Story