பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு; கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரார்த்தனை நடைபெற்றது


கோவிலில் தரிசனம் செய்த பக்தர்களை படத்தில் காணலாம்
x
கோவிலில் தரிசனம் செய்த பக்தர்களை படத்தில் காணலாம்
தினத்தந்தி 2 Jan 2021 9:53 AM IST (Updated: 2 Jan 2021 9:53 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்கள் சிறப்பு வழிபாடும், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

சிறப்பு வழிபாடு-பிரார்த்தனை
ஆங்கில புத்தாண்டு நேற்று பிறந்தது. இதனை முன்னிட்டு நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பெரம்பலூரில் உள்ள மரகதவள்ளித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் மற்றும் பிரம்மபுரீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர்.

எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோவில், வடக்கு மாதவி சாலையில் உள்ள சவுபாக்கிய விநாயகர் கோவில், தெப்பக்குளம் அருகே உள்ள அய்யப்பசாமி கோவில் ஆகிய கோவில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

நீண்ட வரிசையில்...
பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தனி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவில், வெங்கனூர் விருத்தாசல ஈஸ்வரர் கோவில், வாலிகண்டபுரத்தில் உள்ள வாலீஸ்வரர் கோவில், எஸ்.ஆடுதுறையில் உள்ள குற்றம்பொறுத்தவர் கோவில் ஆகியவற்றில் ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் நேற்று காலை நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகங்களும், உச்சிகால பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவில்
செட்டிகுளத்தில் மலை மீதுள்ள தண்டாயுதபாணி கோவில், செட்டிகுளத்தில் உள்ள குபேர தலமான ஏகாம்பரேசுவரர் கோவில் ஆகிய கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில், செட்டிகுளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாடாலூர் அருகே பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள வழித்துணை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேருக்கு அபிஷகங்கள் செய்யப்பட்டு, வடைமாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. பெரம்பலூரில் தீரன்நகர் எதிரில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கிறிஸ்தவ தேவாலயங்களில்...
பெரம்பலூரில் உள்ள தூய பனிமயமாதா தேவாலயத்தில் பெரம்பலூர் மறைவட்ட முதன்மை குருவும், பங்கு தந்தையுமான ராஜமாணிக்கம் தலைமையில் நள்ளிரவு நற்கருணை ஆராதனையும், சிறப்பு திருப்பலியும் நடந்தன. இதில் பனிமயமாதா தேவாலய பங்கு உறுப்பினர்கள், கிறிஸ்தவ கன்னிகையர், கத்தோலிக்க சங்க நிர்வாகிகள் கிறிஸ்தவ மக்கள் மற்றும் திரளான பெண்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. திருத்தலம், பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள டி.இ.எல்.சி. தூய யோவான் திருத்தலம் ஆகிய கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி நள்ளிரவில் சிறப்பு திருப்பலிகள் நடந்தன. பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பாளையத்தில் உள்ள பழமையான புனித சூசையப்பர் திருத்தலத்தில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதே போல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Next Story