ஸ்ரீரங்கம் கோவிலில் போலீஸ் சீருடையில் கமிஷனரிடம் ஆசி பெற்ற ஆந்திர சிறுவன்


ஸ்ரீரங்கம் கோவிலில் போலீஸ் சீருடையில் கமிஷனரிடம் ஆசி பெற்ற ஆந்திர சிறுவன்
x
தினத்தந்தி 3 Jan 2021 6:57 AM IST (Updated: 3 Jan 2021 6:57 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் போலீஸ் சீருடையில் வந்து போலீஸ் கமிஷனரிடம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் ஆசிபெற்றான்.

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடர்ச்சியாக தினமும் ஒரு நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கோவிலில் வேடுபறி வைபவம் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணிகளை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் மேற்பார்வையிட்டுக்கொண்டிருந்தார். கோவிலில் தாயார் சன்னதி வழியாகச் செல்லும்போது போலீஸ் சீருடையில் வந்த சிறுவன் ஒருவன், போலீஸ் கமிஷனர் லோகநாதனை நோக்கி ஓடிவந்தான்.

கமிஷனரிடம் ஆசி பெற்ற சிறுவன்

பின்னர், அவன் போலீஸ் கமிஷனரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முயன்றான். கோவிலில் திடீரென சிறுவன் காலில் விழ முயற்சித்ததை கண்ட கமிஷனர் தடுத்து, அவனிடம் யார்? என விசாரித்தார். அப்போது கோவிலுக்கு சாமி கும்பிட வந்த ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பவன்-சிராவானி தம்பதியின் மகன் சாப்டவாஸ் (வயது 4) என தெரியவந்தது.

சிறு வயதில் இருந்தே அச்சிறுவனுக்கு போலீஸ் சீருடை என்றால் கொள்ளை பிரியம் என்றும், தானும் வளர்ந்து பெரிய ஆளானதும் போலீஸ் அதிகாரி ஆவேன் என அச்சிறுவன் வீட்டில் கூறியதை கேட்டு, பெற்றோர் அச்சீருடையை வாங்கி அணிவித்து கோவிலுக்கு அழைத்து வந்ததாக கூறினர்.

முன்னதாக, போலீஸ் கமிஷனர் வருவதைப்பார்த்த சாப்டவாஸ், அவர் யார்? என பெற்றோரிடம் கேட்டுள்ளான். அதற்கு அவர்கள், அவர் தான் இங்குள்ள பெரிய போலீஸ் அதிகாரி என்றும், நீ அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினால் நீயும் பெரிய போலீஸ் அதிகாரியாக வருவாய் என கூறினராம். அதனால்தான், கமிஷனரிடம் சிறுவன் ஆசீர்ர்வாதம் வாங்க வந்த விவரம் தெரியவந்தது. அச்சிறுவனை தூக்கிய கமிஷனர் லோகநாதன், கொஞ்சிவிட்டு.. எங்கே துப்பாக்கி? என விளையாட்டாக கேட்டு விட்டு, வாழ்த்திவிட்டு சென்றார்.

Next Story