பூதப்பாண்டி அருகே சாலையை சீரமைக்க கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் நூதன போராட்டம்


பூதப்பாண்டி அருகே சாலையை சீரமைக்க கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2021 9:24 AM IST (Updated: 3 Jan 2021 9:24 AM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டி அருகே சாலையை சீரமைக்க கோரி தி.மு.க. கூட்டணி கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினார்கள்.

பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே திட்டுவிளை சந்திப்பு பகுதியில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அங்கு தரைப்பாலமும் உள்ளது. ஆனால் கழிவுநீர் கால்வாய் மூடப்படாமல் உள்ளது.

இதனால் பொதுமக்கள் கவனக் குறைவாக சென்றால் தடுமாறி கால்வாய்க்குள் விழும் நிலை இருந்து வருகிறது. இதனால் திறந்த நிலையில் உள்ள கால்வாயை மூட வேண்டும் என்றும், குடிநீர் குழாய் பதிக்கும் பணி முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் சீரமைக்கப்படாத சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்்.

நூதன போராட்டம்

இந்த நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கழிவுநீர் கால்வாய் மீது சிமெண்டு பலகை போட்டு மூடவும், சாலையை சீரமைக்கக்கோரியும் நேற்று நூதன போராட்டம் நடந்தது. இதையொட்டி கழிவுநீர் கால்வாயின் முன் பகுதியில் மலர் மாலை வைத்தும், சாலையை சீரமைக்காத நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து சாலையில் கருப்பு கொடி நட்டு, மலர் மாலை அணிவித்து பழம், ஊதுபத்தி ஏற்றி அஞ்சலி செலுத்துவது போலவும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

இதற்கு தோவாளை ஒன்றியக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் சக்திவேல் தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் நாஞ்சில் செல்வராஜ், மாவட்ட செயலாளர் சகாயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், தி.மு.க. அவைத் தலைவர் கோசி சுந்தர், பூதப்பாண்டி பேரூர் செயலாளர் ஆலிவர் தாஸ், காங்கிரஸ் கட்சி தலைவர் கலீல் ரகுமான், தோவாளை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் மிக்கேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்ததும், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமார், பூதப்பாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் குழாய் பதித்த பகுதிகளில் நாளை (அதாவது இன்று) முதல் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், குடிநீர் வடிகால் வாரிய ஒப்புதல் பெற்று, திறந்த நிலையில் உள்ள கழிவு நீர் கால்வாயை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்கள். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story