கடைகளை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெருவோர வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்


கடைகளை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெருவோர வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2021 11:45 AM IST (Updated: 3 Jan 2021 11:45 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் கடைகளை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெருவோர கடை வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் முன்பு 15-க்கும் மேற்பட்டோர் தள்ளுவண்டியில் பூ, தேங்காய் உள்ளிட்டவைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் நகராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெற்று சாலையோரத்தில் கடைகள் வைத்துள்ளனர். இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடை வைக்க டெண்டர் விடப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே சம்பவத்தன்று, தெருவோர கடை வியாபாரிகளிடம் அதே பகுதியை சேர்ந்த ஒருவர், தான் கோவில் இடத்தில் கடை வைக்க டெண்டர் எடுத்துள்ளதாகவும், அதனால் தெருவோர கடைகளை வேறு இடத்தில் மாற்றி வைக்க வேண்டும் என கூறி அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

போராட்டம்

இதனால் தெருவோர கடை வியாபாரிகள் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தெருவோர கடை வியாபாரிகள் கடைகளை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மதியம் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், உங்கள் கோரிக்கைகள் குறித்து கோட்டாட்சியரிடம் மனு கொடுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட தெருவோர கடை வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story