கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை


கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை
x
தினத்தந்தி 3 Jan 2021 11:48 AM IST (Updated: 3 Jan 2021 11:48 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது.

கடலூர்,

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி தொடங்கியது. இதில் கடந்த மாதம் பருவமழை தீவிரமடைந்து கடலூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதையடுத்து கடந்த 2 வாரங்களாக மழை பெய்யாமல் ஓய்ந்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக கடலோர மாவட்டங்களில் 2-ந் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

வியாபாரிகள் பாதிப்பு

அதன்படி நேற்று காலை வெயில் அடிக்காமல் வானில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தது. இந்த நிலையில் 6 மணி முதல் மழை தூற தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் மதியம் 12.30 மணி வரை தூறிக்கொண்டே இருந்தது. இதில் அவ்வப்போது பலத்த மழையாகவும் பெய்தது. இதனால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.

இடைவிடாது பெய்த இந்த மழையால் சாலையோரம் தள்ளுவண்டி கடைகள் வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் யாரும் நேற்று கடைகளை திறந்து வியாபாரம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது.

Next Story