சிதம்பரம் அருகே டிரைவர் கொன்று புதைப்பு: மனைவி உள்பட 6 பேர் கைது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்றது அம்பலம்


சிதம்பரம் அருகே டிரைவர் கொன்று புதைப்பு: மனைவி உள்பட 6 பேர் கைது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கொன்றது அம்பலம்
x

சிதம்பரம் அருகே வாலிபர் உடல் புதைக்கப்பட்ட வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் டிரைவரை கொன்ற மனைவி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே வேளங்கிராயன்பேட்டையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக நரிமேடு திடல் உள்ளது. இந்த திடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழிதோண்டி மூடப்பட்டிருந்ததற்கான அடையாளம் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் புதுச்சத்திரம் போலீசார் தாசில்தார் சுமதி முன்னிலையில் மூடப்பட்டிருந்த பள்ளத்தை தோண்டினர். அதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரது உடல் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்களும், இடது கையில் தீபா எனவும், முன்னங்கையில் பி.கே.எஸ்.எனவும் பச்சை குத்தப்பட்டிருந்தது தெரிந்தது.

கார் டிரைவர்

இதையடுத்து முண்டியம்பாக்கத்தில் இருந்து மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரியநற்குணம் மெயின் ரோட்டை சேர்ந்த கருணாகரன் மகன் கார் டிரைவர் சத்யராஜ்(32) என்பது தெரியவந்தது. மேலும் இவருக்கு திருமணமாகி தீபா(30) என்ற மனைவியும் 2 குழந்தைகள் இருப்பதும், சத்யராஜ் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

திடுக்கிடும் தகவல்கள்

தொடர்ந்து சத்யராஜ், கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில், சத்யராஜூம், சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தம் பகுதியை சேர்ந்த காத்தமுத்து மகன் அய்யப்பன்(29) என்பவரும் நண்பர்கள் ஆவார்கள். அய்யப்பன் அவ்வப்போது, சத்யராஜின் வீட்டுக்கு வருவது வழக்கம். அவ்வாறு வரும்போது, சத்யராஜின் மனைவி தீபாவுக்கும், அய்யப்பனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

நாளடைவில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் சத்யராஜிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தீபாவையும் அய்யப்பனையும் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர்கள் தங்கள் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர். இதனால் மீண்டும் மீண்டும் அவர்களை சத்யராஜ் கண்டித்துள்ளார்.

கொலை செய்ய திட்டம்

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் சத்யராஜை கொலை செய்ய திட்டம் தீட்டினர். இதற்காக அய்யப்பன் தனது நண்பர்களின் உதவியை நாடினார்.

அதன்படி கடந்த மாதம் 17-ந்தேதி அய்யப்பன், தனது நண்பர்களான சக்திவிளாகம் குளத்தங்கரை பகுதியை சேர்ந்த குருசாமி மகன் அராத்து என்கிற வினோத்(23), விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் சுபாஷ்(18), மேட்டு காலனி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அருண்(20), சாத்துகுடல் ரோடு பகுதியை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக்(21) மற்றும் சத்யராஜூடன் ஒரத்தூர் சாத்தமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.

அரிவாளால் வெட்டிக்கொலை

பின்னர் மதுகுடித்து விட்டு அவர்கள் அனைவரும் காரில் புறப்பட்டனர். சிறிது தூரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி விட்டு அனைவரும் கீழே இறங்கினர். பின்னர் அய்யப்பன் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து சத்யராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

இதையடுத்து அவரது உடலை காரில் ஏற்றி புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிராயன்பேட்டை பகுதியில் உள்ள நரிமேடு திடலில் குழிதோண்டி புதைத்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சத்யராஜின் மனைவி தீபா, அய்யப்பன், அராத்து என்கிற வினோத், சுபாஷ், அருண், கார்த்தி ஆகிய 6 பேரையும் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story